×

மகாத்மா காந்தி குறித்து சர்ச்சை கருத்து தெலுங்கு நடிகர் மீது போலீசில் புகார்: காங்கிரஸ் எம்எல்சி ஆவேசம்

 

ஐதராபாத்: மகாத்மா காந்தி குறித்து அவதூறாகப் பேசியதாக தெலுங்கு நடிகர் மீது காங்கிரஸ் சட்டமேலவை உறுப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்குத் திரையுலகின் பிரபல நடிகரான ஸ்ரீ காந்த் ஐயங்கார், சமூக வலைதளத்தில் வெளியிட்ட காணொளி ஒன்றில் மகாத்மா காந்தியை இழிவுபடுத்திப் பேசியதாகக் கூறப்படுகிறது. அந்தக் காணொளியில், அவர் காந்தியைப் பற்றித் தரக்குறைவான கருத்துக்களைக் கூறியதுடன், நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்தும் பேசியுள்ளார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் சட்டமேலவை உறுப்பினர் (எம்.எல்.சி) பால்மூர் வெங்கட், நடிகர் ஸ்ரீகாந்த் ஐயங்கார் மீது ஐதராபாத் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், நடிகர் ஸ்ரீகாந்த் ஐயங்கார், மகாத்மா காந்தியை ‘ஒட்டுண்ணி’ போன்ற கொடூரமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

நடிகர் ஸ்ரீ காந்த் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், தெலுங்குத் திரையுலகம் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் எம்.எல்.சி. பால்மூர் வெங்கட் வலியுறுத்தியுள்ளார். இந்த புகார் குறித்து விசாரணை தொடங்க நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து நடிகர் ஸ்ரீ காந்த் ஐயங்கார் இதுவரை பொதுவெளியில் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Mahatma Gandhi ,Congress MLC ,Hyderabad ,Congress Legislative Assembly ,Sri Kant Iyankar ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...