×

போலீஸ் நிலையத்தில் தீக்குளித்து ஓட்டல் உரிமையாளர் தற்கொலை: தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி: போலீஸ் நிலையம் முன்பு ஓட்டல் உரிமையாளர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி, முள்ளக்காடு, காந்திநகரைச் சேர்ந்தவர் சுவிசேஷராஜ் (42). இவருக்கு முத்துக்கனி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சுவிஷேசராஜ் தூத்துக்குடியில் பிரியாணி கடைகள் நடத்தி வந்தார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 1ம் தேதி இவருக்கும், உறவினர்களான மாசானமுத்து, தீபக்ராஜ், பாண்டி, கனி ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் மாசானமுத்து தரப்பினர், சுவிசேஷராஜை இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் மாசானமுத்து தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய சுவிசேஷராஜ் வலியுறுத்தி வந்தார். தாக்குதல் சம்பவத்தில் தனது செல்போனை உடைத்ததோடு, பைக்கையும் அடித்து சேதப்படுத்தியதால் தனி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சுவிசேஷராஜ், முத்தையாபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று கூறியுள்ளார்.

அதற்கு போலீசார் எப்ஐஆரில் இருப்பதாக கூறியுள்ளனர். ஆனாலும் தனி வழக்கு பதிய வேண்டும் என்று வற்புறுத்தியதால் மறுநாள் வாருங்கள் என்று கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த சுவிசேஷராஜ், முத்தையாபுரம் போலீஸ் நிலைய வாசல் முன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டு கொழுந்து விட்டு எரிய நடந்தே போலீஸ் நிலையத்துக்குள் சென்றார். இதைப்பார்த்து பதறிய போலீசார் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான், ஏஎஸ்பி மதன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thoothukudi ,Suvisesharaj ,Gandhinagar, Mullakkadu, Thoothukudi ,Muthukani ,Thoothukudi… ,
× RELATED புதிய சட்டத்தின்படி 125 நாட்கள் வேலை...