ஆனைமலை: ஆனைமலை சுற்றுவட்டாரத்தில், இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு, விதை நெல் தூவும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு கிராம பகுதியில், பழைய ஆயக்கட்டு பாசனம் மூலம் நெல் சாகுபடியில் விவசாயிகள் பலர் ஈடுபடுகின்றனர். இந்த ஆண்டில், முதல் போக நெல் சாகுபடி கடந்த ஜூன் மாதம் துவங்கப்பட்டது. சுமார் 4 மாத விளைச்சலுக்கு பிறகு, அக்டோபர் மாதம் துவக்கத்தில் இருந்து நெல் அறுவடை பணிகள் இருந்தது. பழைய ஆயக்கட்டு பாசன பகுதியில், முதல்போக நெல் சாகுபடி நெல் அறுவடை பணிகள் நிறைவடையும் தருவாயில், அடுத்த கட்டமாக இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன்பு, ஆழியார் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதையடுத்து விவசாயிகள், நெல் அறுவடை நிறைவடைந்த நிலத்தை மீண்டும் உழுது, அதில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தயாராகினர். தற்போது பல்வேறு இடங்களில் விளை நிலம் உழவு பணிகள் மேற்கொண்டு, அதில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு விதை நெல் உலர்த்தி போட்டு நாற்றாங்கால் ஏற்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இன்னும் ஒரு சில வாரத்தில் நாற்றங்கால் ஏற்பட்டு, அதனைத்தொடர்ந்து, நாற்று நடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
