×

கிட்னி முறைகேடு வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்க எந்த ஆட்சேபனையும் இல்லை : உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவிப்பு

டெல்லி : நாமக்கல் கிட்னி முறைகேடு வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு (SIT) விசாரணை செய்ய எந்த ஆட்சேபனையும் இல்லை என உச்சநீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் சக்தீஸ்வரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்ய பொது நல மனுவில், நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத சிறுநீரக விற்பனை மோசடி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா, ஐபிஎஸ் அதிகாரிகள் நிஷா, சிலம்பரசன், கார்த்திகேயன் மற்றும் மதுரை எஸ்பி அரவிந்த் ஆகியோரை கொண்ட குழுவை அமைத்த நீதிமன்றம், நாமக்கல் கிட்னி விற்பனை குறித்து வழக்குப்பதிந்து, விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில், “நாமக்கல் கிட்னி முறைகேடு வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு (SIT) விசாரணை செய்ய எந்த ஆட்சேபனையும் இல்லை. நாங்கள் பரிந்துரைக்கும் அதிகாரிகளின் பெயர்களில் இருந்து தேர்வு செய்து குழுவை அமைக்க வேண்டும். அதிகாரிகளை தொலைதூரத்தில் இருந்து தேர்ந்தெடுப்பதால் நிர்வாக சிக்கல் ஏற்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், “சிறப்பு விசாரணைக் குழு அமைத்த சென்னை ஐகோர்ட் உத்தரவுக்குள் தலையிட விரும்பவில்லை. கிட்னி முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணைக் குழுவை மாற்ற முடியாது,”என தெரிவித்தனர். மேலும் தமிழ்நாடு காவல்துறைக்கு எதிராக சென்னை ஐகோர்ட் கூறிய கருத்துகளை நீக்க ஆணையிட்ட உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

Tags : Special Investigation Team ,SIT ,Tamil Nadu government ,Supreme Court ,Delhi ,Namakkal ,Saktheeswaran ,Paramakudi, Ramanathapuram district ,Madurai ,High Court… ,
× RELATED புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு...