×

தலித் என்பதால் டிஜிபி டார்ச்சர் செய்ததே என் கணவர் தற்கொலைக்கு காரணம்: அரியானா ஏடிஜிபியின் ஐஏஎஸ் மனைவி பரபரப்பு புகார்

சண்டிகர்: அரியானாவின் போலீஸ் ஏடிஜிபியான புரான்குமார்(52) கடந்த 7ம் தேதி சண்டிகரில் உள்ள தனது வீட்டில் தன்னைதானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். புரான் குமாரின் மனைவி அம்னீத் குமார் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். சம்பவம் நடந்த அன்று, புரான் குமாரின் மனைவி அம்னீத் குமார் வீட்டில் இல்லை. அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான அதிகாரப்பூர்வ குழுவில் ஜப்பானுக்கு சென்றிருந்தார். கணவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான தகவல் கிடைத்ததும் அவர் இந்தியாவுக்கு விரைந்து வந்தார். ஜப்பானில் இருந்து திரும்பி வந்த அம்னீத் குமார் தனக்கு நீதி கிடைக்கும் வரை கணவரின் உடலை பிரேத பரிசோதனை நடத்த அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார். இதனால்,பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் சாதிய ரீதியான பாகுபாடு மற்றும் உயர் அதிகாரிகளின் துன்புறுத்தலால் ஏடிஜிபி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அம்னீத் குமார் போலீசில் அளித்த புகாரில்,மாநில டிஜிபி ஷத்ருஜித் கபூர் மற்றும் ஒரு உயர் அதிகாரி மீது குற்றம் சாட்டியுள்ளார்.

புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: தலித் வகுப்பை சேர்ந்த எனது கணவர் மிகவும் நேர்மையான அதிகாரியாவார். தலித் என்பதால் அதிகாரமிக்க உயர் பதவியில் உள்ள அதிகாரிகள் அவரை திட்டமிட்டு துன்புறுத்தினர். அவரை மன ரீதியாக சித்திரவதை செய்தனர். இறுதியில் உயிரை மாய்த்து கொள்வதை தவிர வேறுவழியில்லை, என்ற அளவுக்கு அவரை தள்ளி விட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார். புரான் குமார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் 8 பக்க கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் சாதி அடிப்படையிலான பாகுபாடு, பொது இடங்களில் ஏற்பட்ட அவமானம் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளின் துன்புறுத்தலால் இந்த துயர முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

* டிஜிபியை மாற்ற முடிவு?
இதற்கிடையே,ஏடிஜிபி தற்கொலையால் எழுந்த பிரச்னைகள் தொடர்பாக முதல்வர் நயாப்சிங் சைனி உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், தற்போதைய டிஜிபி ஷத்ருஜித் கபூரை விடுமுறையில் செல்லுமாறு அறிவுறுத்தி அவருக்கு பதில் தற்காலிக டிஜிபியை நியமிப்பது பற்றி கூட்டத்தில் பரிசீலனை செய்யப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : DGP ,Haryana ADGP ,IAS ,Chandigarh ,Haryana Police ,ADGP ,Puran Kumar ,Amneet Kumar ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...