திருவனந்தபுரம்: 7 வருடங்களுக்கு முன் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட சபரிமலை கோயிலின் வாசல், நிலை ஆகியவற்றை செம்பு என்று கூறி கடந்த 2019ம் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் பின்னர் இவற்றுக்குப் பதிலாக புதிய வாசல், நிலை பொருத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதிக்கப்பட்ட தங்கத் தகடுகள் மாயமான சம்பவத்தில் நாளுக்கு நாள் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சபரிமலையில் தங்கத் தகடுகள் பதிப்பதற்காக கடந்த 1998ம் ஆண்டு பிரபல பெங்களூரு தொழிலதிபர் விஜய் மல்லையா 30.300 கிலோ தங்கமும், 1900 கிலோ செம்பும் வழங்கினார். கோயிலின் மேற்கூரை, பக்கச் சுவர்களில் சில பகுதிகள், வாசல், நிலை, படிகள் மற்றும் முன்புறமுள்ள 2 துவாரபாலகர் சிலைகள் ஆகியவற்றில் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டன. இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு வசம் உள்ளன.
இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு 40 கிலோவுக்கு மேல் எடையுள்ள வாசல் மற்றும் நிலை ஆகியவை பராமரிப்புப் பணிகளுக்காக பெங்களூருவை சேர்ந்த உண்ணிகிருஷ்ணன் போத்தி என்பவரிடம் தேவசம் போர்டு வழங்கியது. அப்போது இவை அனைத்தும் செம்புத் தகடுகள் என்று அப்போதைய சபரிமலை கோயில் நிர்வாக அதிகாரியும், இப்போதைய துணை கமிஷனருமான முராரி பாபு சான்றிதழ் அளித்திருந்தார்.
இந்நிலையில் சபரிமலையில் புதிய நிலை மற்றும் வாசல் பொருத்தப்பட்டதாகவும், அதில் 4 கிலோ தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டுள்ளதாகவும் உண்ணிகிருஷ்ணன் போத்தி கூறியுள்ளார். பெங்களூருவில் வைத்து நிலம்பூர் தேக்கை பயன்படுத்தி புதிய வாசலை தயாரித்து அதை ஐதராபாத் கொண்டு சென்று செம்புத் தகடுகளை பதித்து பின்னர் சென்னைக்கு கொண்டு வந்து தங்கமுலாம் பூசி சபரிமலைக்கு கொண்டு வந்து அவற்றை பொருத்தியதாக உண்ணிகிருஷ்ணன் போத்தி மேலும் கூறினார்.
அப்படி என்றால் சபரிமலையில் இருந்து ஏற்கனவே கொண்டு சென்ற தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட வாசலும், நிலையும் எங்கே போனது என்பதில் மர்மம் நிலவுகிறது. விஜய் மல்லையா அளித்த தங்கத்தால் தான் சபரிமலை கோயிலின் வாசல் மற்றும் நிலை ஆகியவற்றில் தகடுகள் பதிக்கப்பட்டன என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதை அப்போது சபரிமலையில் தங்கத் தகடுகள் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சுவாமிநாதன் என்பவரும் உறுதி செய்துள்ளார்.
வெறும் 27 வருடங்களில் தங்கத் தகடுகள் செம்பாக எப்படி மாறும் என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார். அப்படி இருக்கும்போது இவை செம்புத் தகடுகள் என்று அப்போதைய நிர்வாக அதிகாரி முராரி பாபு எப்படி சான்றிதழ் கொடுத்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து தற்போது துணை கமிஷனராக உள்ள முராரி பாபு பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரத்தில் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் ராஜினாமா செய்யக்கோரி திருவனந்தபுரத்தில் தேவசம் போர்டு தலைமை அலுவலகம் முன் பாஜ இளைஞர் அமைப்பினர் மற்றும் இந்து ஐக்கிய வேதி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். தங்கம் மாயமான விவகாரம் தொடர்பாக கேரள சட்டசபையில் நேற்றும் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சியினர் கடும் ரகளையில் ஈடுபட்டனர்.
