×

ஆந்திராவில் போலி மதுபான விற்பனையில் தொடர்பு தெலுங்கு தேசம் நிர்வாகிகள் 2 பேர் சஸ்பெண்ட்: முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின்பேரில் அதிரடி

திருமலை: ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், முலகலசெருவு பகுதியில் மதுவிலக்கு மற்றும் கலால் துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன் போலி மதுவிற்றதாக சிலரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் நடத்திய சோதனையில் கதிரிநாட்டுனிகோட்டா கிராமத்தில் போலி மதுபான உற்பத்தி ஆலை இருப்பதை கண்டனர். அங்கு போலி மதுபானம் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 14 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர்.
போலீசார் விரட்டிச்சென்று 10 பேரை பிடித்தனர்.

மேலும் பல்வேறு பிராண்டுகளின் போலி லேபிள்கள் மற்றும் போலி மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பான விசாரணையில், அத்தேபள்ளி ஜனார்தன்ராவ் என்பவரது தலைமையில் போலி மதுபானம் உற்பத்தி செய்வதும், அவற்றை பெத்ததிப்பசமுத்திரம், பெத்தகல்லு பகுதியில் விற்பனை செய்துள்ளனர். மதுபானம் தயாரிப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர், ஒடிசாவை சேர்ந்த ஒருவர் ஈடுபட்டுள்ளனர். போலி மதுபானங்கள் ராஜேஷ் என்பவரின் வாகனத்தில் கடைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதும் தெரிய வந்தது.

இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு, முகாம் அலுவலகத்தில் நேற்று முன்தினம் கலால் அமைச்சர் கொல்லு ரவீந்திரா, கலால் முதன்மை செயலாளர் முகேஷ்குமார் மீனா, அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல்தேவ்சர்மா மற்றும் கலால் ஆணையர் தர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது போலி மதுபான வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜனார்தன்ராவ் வெளிநாட்டில் பதுங்கியுள்ளார். மேலும் கோட்டராஜு, ராஜேஷ், னிவாசராவ் ஆகியோரும் தலைமறைவாக உள்ளனர். போலி மதுபான உற்பத்திக்கு தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த தாசரிபள்ளி ஜெயச்சந்திரரெட்டி, கட்டா சுரேந்திரநாயுடு ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

முழுமையான விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், போலி மதுபான தயாரிப்பு வழக்கில் தொடர்புடைய தாசரிபள்ளி ஜெயச்சந்திரரெட்டி, கட்டா சுரேந்திரநாயுடு ஆகியோரை தெலுங்குதேசம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து, கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதில் சமீபத்தில் நடந்த தேர்தலில் ஜெயச்சந்திரரெட்டி தம்பல்லப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Telugu Desam Party ,Andhra Pradesh ,Chief Minister ,Chandrababu Naidu ,Tirumala ,Mulakalaseruvu ,Annamayya district, Andhra Pradesh ,Prohibition and Excise Department ,Kathirinattunikota… ,
× RELATED கைவினை பொருட்களால் உள்நாட்டு பொருளாதாரம் உயரும்