×

டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் முதல்வர் வீடு, நடிகை திரிஷா வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்: மர்ம நபரை பிடிக்க ஜிமெயில் நிறுவனத்திற்கு சென்னை போலீசார் கடிதம்

சென்னை: முதல்வர் வீடு, நடிகை திரிஷா வீடு, பாஜக தலைமை அலுவலகம், கவர்னர் மாளிகை, நடிகர் எஸ்.வி.சேகர் வீடு என 5 இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதேநேரம், மிரட்டல் விடுக்கும் நபரின் உண்மையான ஐடி முகவரியை பெறும் வகையில் ஜிமெயில் உள்ளிட்ட மின்னஞ்சல் நிறுவனங்களுக்கு சென்னை மாநகர போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நேற்று இரவு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், இன்னும் சற்று நேரத்தில் தமிழக முதல்வர் வீடு மற்றும் நடிகை திரிஷா வீட்டில் வெடி குண்டு வெடிக்கும்’ என்று கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து உடனே போலீசார் பாதுகாப்பு துறைக்கு தகவல் அளித்தனர். அதன்படி தேனாம்பேட்டை போலீசார் தலைமையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் வீடு முழுவதும் வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. இதனால், இது வெறும் புரளி என தெரியவந்தது.

அதேபோல், தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிலும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வீடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை மற்றும் தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம், மந்தைவெளியில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு தனித்தனியாக மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். அதனை தொடர்ந்து கிண்டி போலீசார் வெடி குண்டு நிபுணர்கள் உதவியுடன கவர்னர் மாளிகை முழுவதும் சோதனை நடத்திய போது, இது புரளி என தெரியவந்தது. அதேபோல் பாஜக தலைமை அலுவலகம், நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிலும் சோதனை நடத்திய போது, அதுவும் புரளி என தெரியவந்தது. அதைதொடர்ந்து, வெடி குண்டு மிரட்டல் தொடர்பாக கிண்டி, தேனாம்பேட்டை, மாம்பலம், பட்டினப்பாக்கம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் கடந்த 2 வாரங்களாக வெளிநாடுகளில் இருந்து மின்னஞ்சல் மூலம் தொடர் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

இதனால், ஒன்றிய உள்துறை உதவியுடன் சென்னை மாநகர சைபர் க்ரைம் போலீசார் மர்ம நபர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மிரட்டல் வரும் மின்னஞ்சல்கள் அனைத்தும் பிரபல நபர்கள் பெயரில் போலியாக உருவாக்கப்பட்டு அனுப்பப்படுகிறது என்று தெரியவந்துள்ளது. இதனால் திட்டமிட்டு வெடி குண்டு மிரட்டல் விடுக்கம் நபர்களின் மின்னஞ்சல் அனுப்பும் நபர்களின் விபரங்களை சென்னை மாநகர சைபர் க்ரைம் போலீசார் ஜிமெயில் உள்ளிட்ட மின்னஞ்சல் நிறுவனத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதன்படி மிரட்டல் விடுக்கும் மர்ம நபர்களின் உண்மையான மின்னஞ்சல் ஐடி சம்பந்தப்பட்ட நிறுவனம் அனுப்பியதும், குற்றவாளிகன் பாஸ்போர்ட்டை முடக்கி கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : PRIME ,MINISTER ,TIRISHA ,DGB ,CHENNAI POLICE ,GMAIL ,Chennai ,Tirisha House ,BJP Headquarters ,Governor's House ,Cybercrime ,Shekar ,
× RELATED டிச.22ல் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க...