×

க.பரமத்தி அடுத்த ராஜபுரம் ராஜவாய்க்காலில் தேங்கி கிடக்கும் கழிவுகள்

க.பரமத்தி, டிச.25: க.பரமத்தி அடுத்த ராஜபுரம் வாய்க்காலூர் ராஜவாய்க்காலில் மண்டிக்கிடக்கும் பயனற்ற கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் உள்ள அமராவதி அணையின் மூலம் கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதில் அமராவதி ஆற்றில் இருந்து பிரியும் ராஜவாய்க்கால்களில் மிகப்பெரிய வாய்க்காலாக உள்ளது. அமராவதி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் வரும் நாள்களில் ராஜவாய்க்கால் பகுதிக்கு தங்கு தடையின்றி பாசனநீர் கிடைத்து வருகிறது.

வாய்க்கால்களில் ஆண்டுதோறும் தண்ணீர் கிடைக்கப்பெறும் காலங்களில் அதன்மூலம் நெல், வாழை மற்றும் மக்காச்சோளம், பருத்தி, சூரியகாந்தி ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட மழையால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது அமராவதி ஆற்றையே நம்பியுள்ள இந்த ராஜவாய்க்காலில் சின்னதாராபுரம் அணைபுதூர் மதகு மூலம் சின்னதாராபுரம், தொக்குப்பட்டி, ராஜபுரம், தொக்குப்பட்டிபுதூர், புஞ்சைகாளகுறிச்சி, வெங்ககல்பட்டி வரை சென்று மீண்டும் ஆற்றில் கலக்கிறது.

தற்போது ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும் தேவையற்ற கழிவு பொருள்களான முட்டை ஓடு, பிளாஸ்டிக் பைகள், கப்புகள், அழுகிய கழிவுப்பொருட்கள், அழுகிய காய்கறிகள், உபயோகமற்ற இலைகளை சிலர் ராஜவாய்க்கால் கொட்டுவதால் தற்போது ராஜபுரம் ஊராட்சி வாய்க்காலூர் சிறிய பாலம் பகுதியில் பயனற்ற கழிவுகள் தேங்கி நிற்பதால் அவ்வப்போது தண்ணீர் செல்ல முடியாமல் பாலத்திற்கு மேல் வழிந்தோடுவதால் அரவக்குறிச்சியில் இருந்து தொக்குப்பட்டி வழியாக சின்னதாராபுரத்திற்கு செல்லும் நெடுஞ்சாலையில் அவ்வப்போது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த இடத்தில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Rajapuram Rajavaikkal ,
× RELATED கிருஷ்ணராயபுரம் அருகே மகிளிபட்டியில்...