புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு முன்னரே பல பொருட்களின் விலையை பெருநிறுவனங்கள் உயர்த்தியதால், மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. ஜிஎஸ்டி சீர்த்திருத்தம் தொடர்பான ஊடக அறிக்கையை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். அந்த அறிக்கையில், ‘கடந்த 2ம் தேதி உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை ஒன்றிய அரசு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்தது.
இதனால் நுகர்வோர் நேரடியாக பயனடைந்திருக்க வேண்டும். ஆனால் உண்மை இதற்கு நேர்மாறானது. வரி குறைப்பு பற்றி பெரு நிறுவனங்கள் தகவல் அறிந்த உடனே, முன்கூட்டியே தங்கள் பொருட்களின் விலைகளை 10 சதவீதம் வரை அதிகரித்தன. இதனால், ஜிஎஸ்டி வரி குறைப்பால் பொதுமக்களுக்கு சிறிய அளவில் மட்டுமே பலன் கிடைத்துள்ளது’ என கூறப்பட்டுள்ளது.
இதை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஜெய்ராம் ரமேஷ், ‘‘சேமிப்பு விழா அல்ல, மோசடி விழா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சீர்த்திருத்தத்திற்கு பதிலாக பிரதமரின் விளம்பர நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி விகிதக் குறைப்புகளின் நன்மைகள் நேரடியாக பொதுமக்களைச் சென்றடையவில்லை என்றால், என்ன பயன்?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.
