லக்னோ: உத்தரபிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மத நிறுவனம் ஒன்றின் கழிவறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 40 சிறுமிகள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றில், அங்கீகாரம் பெறாமல் சட்டவிரோதமாக மதம் சார்ந்த நிறுவனம் ஒன்று இயங்கி வந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகாரளித்ததைத் தொடர்ந்து, கோட்டாட்சியர் அஸ்வினி குமார் பாண்டே தலைமையிலான அதிகாரிகள் குழு, பெண் காவலர்களுடன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை மேற்கொண்டது.
அப்போது, அதிகாரிகள் உள்ளே செல்வதற்கும், மேல் தளத்திற்குச் செல்வதற்கும் மதம் சார்ந்த நிறுவனம் அனுமதி அளித்துள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் உள்ளே நுழைந்து சோதனை செய்தபோது, மொட்டை மாடியில் இருந்த கழிவறை ஒன்று வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. அதனைத் திறந்து பார்த்தபோது, உள்ளே ஒன்பது முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட 40 சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அச்சத்தில் காணப்பட்ட அந்தச் சிறுமிகளால் தெளிவாகப் பேச முடியவில்லை என அதிகாரிகள் கூறினர். உடனடியாக அந்த மத நிறுவனம் மூடப்பட்டு, சிறுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் மாவட்ட குழந்தைகள் நலகாப்பகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளாக முறையான பதிவு இல்லாமல் இயங்கி வந்த இந்த நிறுவனம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
