×

கோவில் திருமாளம் ஊராட்சியில் பூட்டியே கிடந்த ஈமக்கிரியை மண்டபம் செயல்பட நடவடிக்கை

திருவாரூர், டிச.24: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் கோவில் திருமாளம் ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகலாக திறக்கப்படாமல் இருந்து வரும் ஈமக்கிரியை மண்டபம் தினகரன் செய்தி எதிரொலியால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோவில் திருமாளம் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள சிதம்பரகுளம் அருகே அரசு நிதி மூலம் கடந்த 2005ம் ஆண்டில் ரூ.4 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பில் ஈமகிரியை மண்டபம் ஒன்று கட்டப்பட்டது. அப்போது மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக இருந்த அதிமுகவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் பரிந்துரையின்பேரில் இந்த மண்டபம் கட்டப்பட்டது. இந்நிலையில், கடந்த 5 ஆண்டு காலமாக இந்த ஈமகிரியை மண்டபமானது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படாமல்ம மேற்படி ராஜேந்திரன் பூட்டி வைத்துக் கொண்டு அதற்கான சாவியை தன்னிடம் வைத்துள்ள நிலையில், இந்த கட்டிடத்திற்குள் தனது சொந்த உபயோகத்திற்காக பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இந்த சிதம்பர குளத்தை சுற்றியுள்ள ப. திருமாளம், தலையாரி தெரு ,மெயின் ரோடு உட்பட பல்வேறு தெருக்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் தங்களது குடும்பத்தில் இறப்பவர்களுக்கு இறுதி காரியத்தை செய்ய இடமின்றி தவித்து வருவது குறித்து நேற்றைய தினகரனில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து உடனடியாக நேற்று இந்த ஈமகிரியை மண்டபத்தின் சாவியானது ஊராட்சி செயலர் கிருஷ்ணகுமாரிடம் நேற்று காலை ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து அந்த ஈமகிரியை மண்டபம் திறக்கப்பட்டு அதனை சுத்தம் செய்யும் பணியில் கிராம மக்கள் ஈடுப்பட்டுள்ள நிலையில், மண்டபம் திறப்பதற்கு காரணமான தினகரன் நாளிதழுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.

Tags : Thirumalam ,Emakkiriyai Mandapam ,
× RELATED வலங்கைமான் குடமுருட்டி ஆறு படித்துறை...