×

விமான படைக்கு மேலும் 97 தேஜஸ் இலகு ரக விமானங்கள்: ரூ.62,370 கோடி ஒப்பந்தம் கையெழுத்து

புதுடெல்லி: இந்திய விமானப்படைக்கு 97 தேஜஸ் இலகு ரக போர் விமானங்களை வாங்குவதற்காக, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனத்துடன் ரூ.62,370 கோடி ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய விமானப்படையில் மிக்-21 ரக போர் விமானங்கள் ஓய்வு பெறும் நிலையில், தேஜஸ் எம்கே-1ஏ ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது.

இதை தொடர்ந்து, ரூ.62,370 கோடியில் மேலும் 97 தேஜஸ் எம்கே -1ஏ விமானங்களை வாங்க விமானப்படை முடிவு செய்தது. சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான ஒன்றிய அமைச்சரவை குழு இதற்கு ஒப்புதல் அளித்தது. எச்ஏஎல் நிறுவனத்துக்கு 2வது முறையாக ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு, இந்திய விமானப்படைக்கு 83 தேஜாஸ் எம்கே-1ஏ விமானங்களை கொள்முதல் செய்ய எச்ஏஎல் நிறுவனத்துடன் ரூ. 48,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டது.

இந்த மேம்பட்ட விமானத்தில் சுயம் ரக்‌ஷா கவச் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் இடம் பெற்றிருக்கும்.இதில் 64 சதவீதத்திற்கு அதிகமான பொருட்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. இந்த போர் விமானங்களின் விநியோகம் வரும் 2027-28ல் தொடங்கும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒற்றை என்ஜின் கொண்ட மிக்-21 போர் விமானத்துக்கு மாற்றாகும். இந்திய விமான படையின் போர் பிரிவில் ஒதுக்கப்பட்ட விமான பிரிவுகளின் எண்ணிக்கை 42ல் இருந்து 31 ஆக குறைந்து விட்டதால் அதிகளவில் போர் விமானங்கள் இணைக்கப்பட்டு வருகிறது.

Tags : Tejas ,Indian Air Force ,New Delhi ,Ministry of Defence ,Hindustan Aeronautics Limited ,HAL ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...