×

பாரம்பரிய பனிவரகு ரகங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

 

கோவை, செப். 23: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய பனிவரகு ரகங்களில் மதிப்பு கூட்டுதல் தொடர்பான பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கம் சார்பில், கனடா நாட்டின் கிராண்ட் செலஞ்ச் நிதியுதவியுடன் பாரம்பரிய பனிவரகு ரகங்களில் மதிப்பு கூட்டுதல் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி நேற்று நடந்தது. இப்பயிற்சி நிகழ்ச்சியில், வேளாண் வானிலையியல் உதவி பேராசிரியர் கோகிலவாணி வரவேற்றார். பயிர் மேலாண்மை இயக்குனர் கலாராணி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, சிறுதானிய பயிர்களுக்கான மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களின் பயன்கள் மற்றும் தமிழ்நாட்டின் சிறுதானிய பயிர்கள் அதிகளவில் உற்பத்தியாகும் சிறப்பு மண்டலங்கள் தொடர்பாக விளக்கினார். வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி, காலநிலை தகவல்களின் பயன்பாடு, பனிவரகு சாகுபடி செய்முறைகள் குறித்து எடுத்துரைத்தார். அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தின் தலைவர் கார்த்திகேயன் சங்க இலக்கியங்களில் சிறுதானிய பயிர்களின் பயன்பாடு தொடர்பாக விவரித்தார். தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்ப பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இதில், சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்ந்த 20 விவசாயிகள் பங்கேற்றனர். இதில், பாரம்பரிய நெல் ரகங்களில் மதிப்புக்கூட்டப்பட்டு தயார் செய்யப்பட்ட சத்துமாவு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

Tags : Coimbatore ,Tamil Nadu Agricultural University ,Crop Management Mission ,Agro-Climate Research Centre ,Tamil Nadu Agricultural University, ,Canada… ,
× RELATED சூலூரில் மாணவியிடம் பேசியதால்...