×

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் ரூ.67.34 கோடியில் 6 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ரூ.67.34 கோடியில் புதிய தொழிற்பேட்டைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ரூ.28.33 கோடி மதிப்பீட்டில் 77.86 ஏக்கரில் 4 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இதுபோல, கடலூர் மாவட்டம், மருதாடில் ரூ.3.60 கோடியில் 11.57 ஏக்கரில் புதிய தனியார் தொழிற்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம், கிட்டாம்பாளையம் அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டையில் ரூ.24.61 கோடியில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கம், மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் ரூ.8.20 கோடியில் உணவுப்பதப்படுத்துதல் குழுமத்திற்கான பொது வசதி மையம் என மொத்தம் ரூ.67.34 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் ரூ.29.27 கோடியில் 3 தளங்களுடன் தொழிலாளர்கள் தங்கும் விடுதி, ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிட்கோ தொழிற்பேட்டையில் வேளாண் பொருட்கள் உற்பத்தி சார்ந்த தொழில்முனைவோர்களுக்காக ரூ.15.23 கோடியில் 17.95 ஏக்கரில் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் 18 தொழிற்பேட்டைகளின் உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டிற்கு ரூ.34.07 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகள் என மொத்தம் ரூ.78.57 கோடி மதிப்பிலான 20 திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

இதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் சிட்கோ நிறுவனத்தில் உதவி மேலாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 11 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தா.மோ.அன்பரசன், தலைமை செயலாளர் முருகானந்தம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அதுல் ஆனந்த், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu Small Industries Development Corporation ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Tamil Nadu Micro, Small and Medium Enterprises Department ,Tiruvallur ,Tirunelveli ,Tiruvarur ,Chengalpattu… ,
× RELATED அடையாறு – மாமல்லபுரம் இடையே டபுள்...