×

இன்று அனுமன் ஜெயந்தி கோலாகலம் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரம்: சுசீந்திரத்தில் 16 வகை பொருட்களால் அபிஷேகம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

 

நாமக்கல்: இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான அனுமன் ஜெயந்தி இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு கோயில்களில் அனுமன் ஜெயந்தி சிறப்பு பூஜைகள் நடந்தன. நாமக்கல் கோட்டையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் ஆன 18 அடி உயரத்தில் ஆஞ்சநேயர், நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். இங்கு இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

மார்கழி மாத அமாவாசையில் மூலநட்சத்திரம் அன்று அனுமன் ஜெயந்திவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலையில் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைகள் மாலையாக கோர்க்கப்பட்டு சாத்தப்பட்டது. அதிகாலை 4.30 மணிக்கு வடைமாலை அலங்காரத்தில் ஆஞ்சநேயர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் தீபாரதனை நடைபெற்றது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கோயில் வளாகத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஜெய் ஆஞ்சநேயா என விண்ணதிர பக்தி கோஷமிட்டனர்.

பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய 2 தர்மவாசல்கள் கோயில் அருகில் அமைக்கப்பட்டிருந்தது. ரூ.250 செலுத்தி விரைவாக சுவாமியை தரிசனம் செய்ய, கட்டண தரிசன வாயில் தனியாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாயில்கள் மூலம் பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர். வெளியூரில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்வார்கள் என்பதால் நகரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோயில் வளாகம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுசீந்திரம்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் உள்ள 18 அடி உயர ஆஞ்சநேயர் உள்ளார். அனுமன் ஜெயந்தியையொட்டி இன்று காலை 8 மணி முதல் மஞ்சள், நெய், இளநீர், நல்லெண்ணெய், திரவிய பொடி (களபம்), பன்னீர், தேன், பால், அரிசி மாவுப்பொடி, விபூதி, தயிர், எலுமிச்சை சாறு, குங்குமம், சந்தனம், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம் ஆகிய 16 வகையிலான பொருட்கள் மூலம் ஷோடச அபிஷேகம் நடந்தது.

முன்னதாக அதிகாலை 5 மணிக்கு, ஆஞ்சநேயர் சன்னதிக்கு எதிரே உள்ள ராமர் சன்னதியில் அபிஷேகங்கள் நடந்தன. சுவாமியை தரிசனம் செய்ய அதிகாலை முதல் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும், பகல் 11 மணியில் இருந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு ராமபிரானுக்கு புஷ்பாபிஷேகம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து பஜனை மற்றும் புஷ்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags : Hanuman Jayanti ,Namakkal Anjaneyar ,Swami ,Namakkal ,Hindus ,Anjaneyar ,Namakkal Fort ,
× RELATED தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள்...