×

‘மறப்போம், மன்னிப்போம்’- அண்ணாவின் வாசகத்தை புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்ளட்டும்: எடப்பாடிக்கு செங்கோட்டையன் நினைவூட்டல்

 

கோபி: மறப்போம், மன்னிப்போம் என்ற அண்ணாவின் வாசகத்தை நினைவூட்ட விரும்புகிறேன், இதை புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்ளட்டும் என்று நேற்று கோபியில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. இந்நிலையில், கடந்த 5ம் தேதி ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது செங்கோட்டையன், “இன்னும் 10 நாட்களுக்குள் அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும். ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தன்னுடன் தொடர்பில் உள்ள ஒத்த கருத்துடைய முன்னாள் அமைச்சர்கள், பிரிந்து சென்றவர்களை வைத்து ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். கெடு விதித்த மறுநாளே, செங்கோட்டையன் வகித்து வந்த அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். மேலும் அவரது ஆதரவாளர்கள் 13 பேரின் பதவிகளும் பறிக்கப்பட்டன.

டெல்லிக்கு சென்ற செங்கோட்டையன், அங்கு ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்துவிட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 10 நாட்களாக செங்கோட்டையனை சந்தித்த ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் 10 நாட்கள் காலக்கெடு முடிவதற்குள் நல்ல பதில் கிடைக்கும் என செங்கோட்டையன் கூறியதாக தெரிவித்தனர். செங்கோட்டையனும் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்தித்ததால் 10 நாட்கள் கெடு முடிவதற்குள் ஏதாவது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் எடப்பாடிக்கு செங்கோட்டையன் விதித்த கெடு நேற்றுடன் (15ம் தேதி) முடிவடைந்தது. எனவே செங்கோட்டையன் ஏதாவது அதிரடி அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் கோபியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அண்ணா பிறந்த நாளையொட்டி நேற்று (திங்கள்) அண்ணா உருவப்படத்திற்கு செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பேரறிஞர் அண்ணாவின் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு. மறப்போம் மன்னிப்போம் என்ற வார்த்தைகளை நினைவூட்ட விரும்புகிறேன். எம்ஜிஆரின் கனவு, ஜெயலலிதாவின் கனவு, மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும் என்றுதான் நான் மனம் திறந்து பேசினேன். இயக்கம் ஒன்றுபட வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி மலர வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இந்த கருத்துக்களை கடந்த 5ம் தேதி பிரதிபலித்தேன்.

தொண்டர்கள், பொதுமக்கள் கருத்துக்களை மனதிலே கொண்டு, புரிய வேண்டியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்க நான் கடமைப்பட்டு இருக்கிறேன். இந்த இயக்கம் வலிமை பெறுவதற்கு, 2026ல் வெற்றி பெறுவதற்கு எல்லோரும் உறுதுணையாக இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவரிடம் அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பு, 10 நாள் காலக்கெடு முடிவடைந்தது, விஜய்யுடன் கூட்டணி உள்ளிட்ட கேள்விகளை நிருபர்கள் எழுப்பினர். ஆனால் அவர் எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.

 

Tags : Anna ,Sengottaiyan ,Edappadi ,Gopi ,minister ,K.A. Sengottaiyan ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,former minister ,
× RELATED தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல்...