×

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: தென்னிந்திய பகுதிகளில் மேல்நிலவும் வளிமண்டத்தில் கீழடுக்கு சுழற்சியால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடல், அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 – 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளில் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai Meteorological Centre ,Chennai ,Meteorological Centre ,Cuddalore ,Villupuram ,Kallakurichi ,India ,South Odisha ,
× RELATED டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு...