×

மதச்சார்பின்மை, ஒற்றுமை என்ற சொற்கள் பாஜவுக்கு பிடிக்காது 100 நாள் வேலை திட்டத்தின் உண்மையான நோக்கத்தை ஒன்றிய அரசு அழித்து விட்டது: மாற்றங்களை திரும்ப பெற வைப்போம், நெல்லை அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

நெல்லை: மதச்சார்பின்மை, ஒற்றுமை என்ற சொற்கள் பாஜவுக்கு பிடிக்காது. 100 நாள் வேலை திட்டத்தின் உண்மையான நோக்கத்தை ஒன்றிய அரசு அழித்து விட்டது. இதில் செய்யப்பட்ட மாற்றங்களை திரும்ப பெற வைப்போம் என நெல்லையில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்து உள்ளார். நெல்லை மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா, பொருநை அருங்காட்சியகம் திறப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

2வது நாளாக நேற்று காலை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த விழாவில் நெல்லை மாவட்டத்தில் 15 வழித்தடங்களில் புதிய அரசு பஸ் சேவைகளை தொடங்கி வைத்து, 300 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர ஸ்கூட்டர்களை வழங்கி ரூ.182.74 கோடியில் முடிவடைந்த 32 திட்டப் பணிகளை துவக்கி வைத்தார். மேலும் ரூ.98 கோடி மதிப்பில் காயிதே மில்லத் நூலகம் உட்பட ரூ.357 கோடி மதிப்பில் 11 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ஏழை, எளிய 44 ஆயிரத்து 924 பயனாளிகளுக்கு ரூ.101 கோடியே 48 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் மொத்தம் ரூ.835.94 கோடி மதிப்பிலான திட்டங்களை நெல்லை மாவட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணித்து பேசியதாவது: மக்களுக்குத் தேவையானதை பார்த்துப் பார்த்து செய்து வழங்கும் மக்களாட்சியை நடத்திக் கொண் டிருக்கிறோம். இதற்கு நேர்மாறாக, மக்கள் விரோத ஆட்சியை ஒன்றிய அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. இந்திய கிராமப்புறங்களின் உயிர்நாடியாக இருந்து, பல கோடி ஏழை மக்களின் வறுமையை போக்கிய மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்தை இப்போது, பா.ஜ. அரசு திட்டமிட்டு முடக்கியுள்ளது.

மகாத்மா காந்தி பெயரையே நீக்கி, பெரும்பாலான இந்திய மக்களுக்கு புரியாத இந்திப் பெயரை வைத்துள்ளனர். மதச்சார்பின்மை, ஒற்றுமை என்ற சொற்கள் பாஜவுக்கு பிடிக்காது. அதனால், அதையெல்லாம் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்திய காந்தியையும் அவர்களுக்கு பிடிக்காது. உலகம் முழுவதும் இந்தியாவின் அடையாளமாக இருக்கும் தேசத்தந்தை காந்தியின் பெயரை நீக்கியுள்ளனர். காந்தியின் பெயரை நீக்கியது மட்டுமல்ல, 100 நாள் வேலை திட்டத்தின் உண்மையான நோக்கத்தை அழித்து விட்டார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்தத் திட்டத்தை பல்வேறு கோணங்களில் கெடுத்தார்கள். பல வகைகளில் நாசப்படுத்தினார்கள். ஆட்களைக் குறைத்து, வேலை நாட்களை குறைத்தார்கள். சரியாக சம்பளம் தரவில்லை. அங்கிருந்து முறையாக வரக்கூடிய நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை. ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியைகூட, மாநில அரசான நாம்தான் சமாளித்து வழங்கினோம். இப்படி சிறிது, சிறிதாக நாசம் செய்த அந்த திட்டத்திற்கு, இப்போது மொத்தமாக மூடு விழா நடத்தி விட்டார்கள்.

இனி, மாநில அரசு 40 சதவீதம் நிதி தர வேண்டுமாம். ஏற்கனவே, நிதி நெருக்கடியை உருவாக்கி, நிதி ஒதுக்கீடு செய்யாமல் நிறுத்தி வைத்து, நம்மை முடக்கப் பார்ப்பவர்கள், இப்போது கூடுதல் சுமையை நமது தலையில் கட்டுகிறார்கள். அறுவடைக் காலங்களில், 60 நாட்கள் வேலை எதுவும் வழங்கப்படாது என்று மாற்றம் செய்துள்ளார்கள். இதனால், வேளாண் பணி செய்தவர்கள் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிப்பை சந்திக்கிறார்கள்.

மொத்தத்தில், ஏழைகளுக்கும், ஒன்றிய பாஜ அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கைகழுவி இருக்கிறார்கள். நாடாளுமன்றத்திலும் இதைப் பற்றி முறையாக விவாதிக்காமல் அக்கிரமம் செய்து, நிறுத்திவிட்டார்கள். இதன் விளைவுகள் இதை யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மோசமாக இருக்கிறது. அதனால்தான், அரசியல் இயக்கங்கள், செயற்பாட்டாளர்கள், உலகப் புகழ் பெற்ற பொருளாதார அறிஞர்கள், நோபல் பரிசு பெற்ற வல்லுநர்கள் என பலரும் ஒன்றிய பாஜ அரசின் முடிவை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறார்கள்.

“இது ஒரு வரலாற்றுத் தவறு” என்று எச்சரிக்கை மணிகளை ஒலித்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான், வருகிற 24ம் தேதி 100 நாள் வேலைத்திட்டத்தை நிறுத்தியதற்கு எதிராக, திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில், தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசிற்கு எதிராக நாம் ஒரு மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த அறிவித்திருக்கிறோம். ஆனால், இதைப் பற்றி மூச்சுக்கூட விடாமல் இருக்கிறார் போலி விவசாயி பழனிசாமி. நான் தான் விவசாயி, நான் தான் விவசாயி என்று சொல்கிறார்.

நானும் கேடி தான், நானும் திருடன் தான் என்று சொல்வது போல், நானும் விவசாயி தான், நானும் விவசாயி தான் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். இதுவரைக்கும் இதைப்பற்றி அவர் வாய் திறக்கவில்லை. ஏற்கனவே, விவசாயிகளின் உரிமையை பறிக்க, அவர்களையெல்லாம் நடுத்தெருவில் நிறுத்தி, பெரிய போராட்டத்தையே நடத்தினார்கள். எதற்கு? அப்போது மூன்று வேளாண் சட்டத்தை பாஜ கொண்டு வந்தது. அதற்கு, பாஜகாரர்களே, மூக்கின் மீது விரல் வைக்கும் அளவிற்கு முட்டுக் கொடுத்தார் பழனிசாமி.

போராடுபவர்களை எல்லாம் புரோக்கர் என்று சொன்னார். அதுமட்டுமா? சிறுபான்மையினருக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் எதிரான குடியுரிமைத் திருத்த சட்டத்தை பாஜக. கொண்டு வந்தபோது, நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. இதனால் எந்த முஸ்லிம் பாதிக்கப்பட்டார் என்று மனசாட்சியே இல்லாமல் கேட்டவர் பழனிசாமி. இந்த துரோக லிஸ்டில், லேட்டஸ்டாக 100 நாள் வேலைத் திட்டமும் சேர்ந்திருக்கிறது.

பாஜ அரசு பல கோடி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் போது கூட, அதை எதிர்க்க துணிச்சல் இல்லாமல், அநியாயத்திற்கு துணைபோகும் இந்த செயலை மக்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். எனவே தான், மக்கள் சக்தியின் துணையோடு இந்த சட்டத்தையும் திரும்பப் பெற வைப்போம். இது எங்களுடைய லட்சியம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

* ‘தமிழ் மீதும், தமிழர் மீதும் ஒன்றிய அரசுக்கு வெறுப்பு சண்டையில் நிச்சயம் ஜெயிப்போம்’
‘பொருநை – தமிழரின் பெருமை. இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனிமேல் தமிழ் நிலத்தில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற நம்முடைய வாதத்திற்கான சான்றுகளை அறிவியல் பூர்வமாக நிறுவி இருக்கிறோம். கீழடி, பொருநை என்று வரலாற்று தரவுகளை, ஏன் தொடர்ந்து உரக்கப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

தமிழர்களான நமது பண்பாடு தனித்துவமானது, முற்போக்கானது. இந்தியத் துணைக்கண்டத்தின் நாகரிகத்தின் தொட்டிலாகவும், உச்சமாகவும் இருந்தது தமிழ் நிலம் தான். அதற்கு பல இலக்கியச் சான்றுகள் உள்ளன. ஆனால், இலக்கியம் மட்டுமே ஒருபோதும் வரலாற்று சான்றாகாது. கீழடி தொடங்கி பல வரலாற்று இடங்களில் நாம் மேற்கொள்ளும் அகழாய்வுகளுக்கு, ஒன்றிய பாஜ அரசு எப்படியெல்லாம் தடை போடுகிறார்கள் என்று தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் வெறுப்போடு செயல்படுபவர்களை உறுதியுடன் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். இல்லாத சரஸ்வதி நதி நாகரிகத்தைத் தேடி அலைபவர்களுக்கு கண் முன்னே நாம் வெளியிடும் ஆய்வுகள் தெரிவதில்லை. அதற்காக நாம் சோர்ந்து விட முடியுமா? நமது கடமையில் இருந்து நாம் பின்வாங்கிவிட முடியுமா? நமது வரலாற்றை விட்டுக் கொடுத்துவிட முடியுமா? நிச்சயம் முடியாது.

ஈராயிரம் ஆண்டு கால சண்டை இது. இதில் நாம் தோல்வி அடைய மாட்டோம். எதிர்ப்போம். வெற்றி பெறுவோம். இதுதான் திமுக. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இதுதான் தமிழ்நாடு. உங்களுடைய அசைக்க முடியாத ஆதரவுடன் இது என்றும் தொடரும். எத்தனை தடைகள் வந்தாலும் திராவிட மாடலால் தமிழ்நாடு வெல்லும். தமிழ்நாடு வளரும்’ என்று முதல்வர் மு.கஸ்டாலின் தெரிவித்தார்.

* கீழடி, பொருநை பார்வையிட பிரதமர் மோடிக்கு அழைப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், சிவகளை உள்ளிட்ட அகழாய்வுகளை மேற்கொண்டு இப்போது உலகமே திரும்பிப் பார்க்கக்கூடிய அளவிற்கு பொருநை அருங்காட்சியகத்தை உருவாக்கி இருக்கிறோம்.

பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் கட்டியுள்ள கீழடி, பொருநை அருங்காட்சியகத்திற்கு வந்து பார்க்க வேண்டும் என இந்த கூட்டத்தின் மூலமாக, நான் அவர்களை அன்போடு அழைக்கிறேன். நீங்கள் வந்து பார்த்தால் தான் தமிழினுடைய நாகரிகம் எந்த அளவுக்கு தொன்மை கொண்டிருக்கிறது என்பது தெரியும். நமது திராவிட மாடல் அரசு ஒரு கட்சியின் அரசு அல்ல, இனத்தின் அரசு என்று தொடர்ந்து சொல்கிறேன். அதற்கான பெருமைமிகு சாட்சிதான். பொருநை அருங்காட்சியகம்’ என்று தெரிவித்தார்.

* 100 நாள் வேலைத்திட்டத்தை நிறுத்தியதை பற்றி மூச்சுக்கூட விடாமல் இருக்கிறார் போலி விவசாயி பழனிசாமி.

* நானும் கேடி தான், நானும் திருடன் தான் என்று சொல்வது போல், நானும் விவசாயி தான், நானும் விவசாயி தான் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். இதுவரைக்கும் இதைப்பற்றி பழனிசாமி வாய் திறக்கவில்லை.

Tags : BJP ,Union government ,Chief Minister ,M.K. Stalin ,Nellai government ,Nellai ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...