×

டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு ஒருபோதும் அஞ்சாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பது தொடர்பாகவும் தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் தகுதியான வாக்காளர்களை சேர்ப்பது குறித்தும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.

காணொளி காட்சி வாயிலாக நடைபெறும் கூட்டத்தல் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் தவறுதலாக ஒருவர் விடுபட்டிருந்தாலும் மீண்டும் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக மாவட்டச் செயலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

வாக்குச்சாவடி வாரியாக மிகவும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். 168 தொகுதிகளில் 10%க்கும் அதிகமானோர் நீக்கப்பட்டுள்ளனர்; நாம் வாக்குச்சாவடி வாரியாக கண்காணிக்க வேண்டும். நீக்கப்பட்ட 97 லட்சம் வாக்காளர்களில் நம் வாக்காளர்கள் இருக்கிறார்களா என கவனமாக பார்க்க வேண்டும். நீக்கப்பட்டவர்கள் இறந்துவிட்டார்களா, இடம் மாறிவிட்டார்களா, இரட்டை பதிவா என கண்காணிக்க வேண்டும். புதிய வாக்காளர்கள் இணைக்கப்படுவதையும் தொடர்ந்து கவனிக்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் புதிய பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்.

அதிமுகவும் பாஜகவும் களத்துக்கே வரவில்லை; துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. எஸ்.ஐ.ஆர். பணியின்போது அதிமுக, பாஜக களத்துக்கு வராததுதான் நாம் சந்தேகப்பட வேண்டியதாக உள்ளது. நேர்வழியில் வீழ்த்த முடியாத பாசிச சக்திகளும், எதிரிகளும் குறுக்கு வழியில் காரியம் சாதிக்க நினைப்பார்கள். குறுக்கு வழியில் காரியம் சாதிக்க நினைக்கும் பாசிச சக்திகளுக்கு நாம் கடுகளவுகூட இடம் தரக் கூடாது.

நம் கவனத்தை திசை திருப்ப எதிரிகள், வீணர்கள் கூட்டம் முயற்சி செய்வார்கள். களத்தில் நாம்தான் வலிமையாக உள்ளோம், நம் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி. வெற்றியை எட்டும் வரைக்கும் கவனம் சிதறாமல் உழையுங்கள் என நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். எதிரிகளின் முயற்சிகளை எல்லாம் புறந்தள்ளி, தேர்தல் பணி ஆற்றுங்கள். வெற்றிக் கோட்டை நெருங்கும் நேரத்தில் பதற்றமோ, அசதியோ கூடாது. டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு ஒருபோதும் அஞ்சாது

Tags : Tamil ,Nadu ,Delhi ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Mu. K. ,Dimuka District Secretaries ,Stalin ,
× RELATED தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 1,299...