×

எங்க ஊர்ல வர இன்னும் 25 வருஷம் ஆகும்.. திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் ‘அடி பொலி’ : தமிழக முதல்வருக்கு கேரள யூடியூபர் பாராட்டு

திருச்சி: திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் அடி பொலி. கேரளாவில் இதுமாதிரி வருவதற்கு 25 ஆண்டுகளாகும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள யூடியூபர் பாராட்டு தெரிவித்துள்ளார். திருச்சி பஞ்சப்பூரில் ரூ.480 கோடியில் மிகப் பிரம்மாண்டமாக கலைஞர் கருணாநிதி பேருந்து முனையத்தை கடந்த மே மாதம் 9ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, ஜூலை 16ஆம் தேதி பேருந்து நிலையம் முழுவதுமாக மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த பேருந்து முனையம் திறப்பிற்குப் பின்பு பயணிகள் அனைவரும், உலகத்தரத்தில் பேருந்து நிலையம் அமைந்திருப்பதாக பெரும் வரவேற்பு தெரிவித்தனர். சர்வதேச தரத்தில் விமான நிலையம் போன்று இயங்குவதாக மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த சூழலில், கேரள மாநிலத்தை சேர்ந்த யூடியூபர் ஒருவர் திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை சுற்றி பார்த்து அதை வீடியோவாக பதிவு செய்து தமிழக முதல்வரை பாராட்டி உள்ளார். அந்த வீடியோவில், ‘‘இதுபோல கேரளாவில் நம் நாட்டுல வர மினிம்மம் 25 வருஷம் ஆகும். ஏர்போட்டு பிலீங் ஆகுது. புல்லா ஏர் கண்டிஷன். தமிழ்நாடு கவர்மென்ட் மக்களுக்காக அத்தனையும் செட் பண்ணி கொடுத்திருக்காங்க… கலைஞர் பெயரில் 2 பஸ் ஸ்டாண்ட் இருக்கு… கிளாம்பாக்கத்துல ஒன்னு இருக்கு… 2வது இங்க… இங்க கலைஞர் கருணாநிதியின் சின்ன வயசு போட்டோ வெச்சு இருக்காங்க.. பிரமாதமான காரியத்த செஞ்சி இருக்காங்க… ஒரு பிளாஸ்டிக் கவரை கூட பார்க்க முடியல… 100 மார்க் கொடுக்கும் அளவுக்கு மெயின்டனன்ஸ் இருக்கு. ஆறு எஸ்கலேட்டர் இருக்கு… முழுசா ஏர் கண்டிஷன் பஸ் ஸ்டாண்டை நகரத்திற்கு அருகிலேயே கட்டி கொடுத்து இருக்காங்க… முதல்வர் எம்.கே.ஸ்டாலின் மக்களுக்கு பிரமாண்டமான பேருந்து நிலையத்தை கட்டிக் கொடுத்து இருக்காரு. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்டு உள்ள இடத்தில் அமைந்துள்ளது. சூப்பராயிட்டுள்ளது (அடி பொலியாயிட்டு) சம்பவம் செஞ்சது தமிழ்நாடு அரசு’’
இவ்வாறு மலையாளத்தில் வர்ணனை செய்து, திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை பெருமையாக பேசி உள்ளார். பின்னர், அங்கிருந்த பயணி ஒருவரிடம், ‘‘முன்னாடி கோவைதான் சுத்தமா இருக்கும்னு சொல்வாங்க… இப்போது சென்னை, திருச்சி பஸ் ஸ்டாண்ட் ரொம்ப சுத்தமா இருக்கு… நீங்க என்ன சொல்றீங்க…’’ என அந்த யூடியூபர் கேட்கிறார். அதற்கு அந்த பயணி, ‘நான் சென்னைக்கு போனது இல்ல… திருச்சி இப்போ ரொம்ப சுத்தமா இருக்கு…’ என்றார்.

உடனே யூடியூபர், ‘‘தமிழ்நாடு ரொம்ப தூரம் போயிடுச்சு… ஜில்லுனு ஏசி நீங்க உட்காந்து இருக்கீங்க… நீங்க எந்த ஊர்’’ என கேட்கிறார். அதற்கு அந்த பயணி, ‘இப்படி வரும்னு நாங்க நினைச்சு கூட பார்க்கல… நான் பக்கத்துல விராலிமலைதான்..’’ என்கிறார். உடனே, ‘‘நான் கேரளாவுல காலிகட்… நீங்க இதுமாதிரி வரும்னு எதிர்ப்பாக்கல்லல’’ என யூடியூபர் கேட்க, அந்த பயணி, ‘‘எதிர்ப்பார்க்கவே இல்லை’’ என கூறுகிறார். பின்னர், நன்றி தெரிவித்துவிட்டு யூடியூபர் கிளம்பி சென்றார்.

Tags : Trichy ,Panchapur Bus Terminal ,Adi ,Kerala YouTuber ,Tamil Nadu ,Chief Minister ,Trichy Panchapur Bus ,Terminal ,Adi Boli ,Kerala ,YouTuber ,M.K. Stalin ,Kalaignar ,Karunanidhi ,Trichy Panchapur ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...