×

கோவையில் மாநில அளவிலான வாள் வீச்சு போட்டி

கோவை, செப். 2: கோவையில் நடந்த மாநில அளவிலான வாள் வீச்சு போட்டியில், சிறுவர், சிறுமிகள் அசத்தலாக தங்களது திறமையை வெளிப்படுத்தினர். ஒலிம்பிக் விளையாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் பென்சிங் என்னும் வாள் வீச்சு விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவ, மாணவிகள் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் வாள் வீச்சு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு வாள் வீச்சு சங்கம் சார்பில், மாநில அளவிலான வாள் வீச்சு விளையாட்டு போட்டி கோவை சரவணம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் நடந்தது.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியே இப்போட்டி நடந்தது. இதில், கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, சேலம், கோவை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். 17 வயதினருக்கு உட்பட்ட பாயில், சேபர், எப்பி என மூன்று பிரிவின்கீழ் இப்போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற சிறுவர், சிறுமிகள் ஆவேசமாக வாளை சுழற்றி, தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதில் தேர்வு செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகள் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை, கோவை மாவட்ட வாள் வீச்சு சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : Coimbatore ,Tamil Nadu ,Olympic Games ,
× RELATED போக்குவரத்து துறை சார்பில்...