×

ரிஷிவந்தியம் கீழ்பாடி கிராமத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா ரத்து பொதுமக்கள் முற்றுகை-சாலை மறியல் போராட்டக்காரர்களை கைது செய்ததால் பரபரப்பு

ரிஷிவந்தியம், டிச. 16: தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் இடங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் துவங்க உள்ளதாக அண்மையில் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ள கீழ்பாடி கிராமத்தில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் துவங்க கடந்த 20 நாட்களாக அங்குள்ள கிராம சேவை மைய கட்டிடத்தை தேர்வு செய்து அதற்கான பணிகளாக வண்ணம் பூசுவது, செடிகள், தளவாட பொருட்களை அமைப்பது போன்ற பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அக்கட்டிடத்தில் ஏற்கனவே ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம்கார்த்திகேயன் பெயர் எழுதப்பட்டு இருந்தது. அதை அழித்துவிட்டு அம்மா மினி கிளினிக் என எழுத முற்பட்ட போது எதிர்ப்பு கிளம்பியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று காலையில் கீழ்பாடி கிராமத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா திடீர் ரத்து என அறிவிக்கப்பட்டது. இதனை கண்டித்து கிராம மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு காலை 9 மணியளவில் ஒன்று திரண்டு முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ரிஷிவந்தியம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனை தொடர்ந்து ரிஷிவந்தியம் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயபால், சங்கராபுரம் வருவாய் மண்டல துணை வட்டாட்சியர் வெங்கடேசன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து அப்பகுதி மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதிலும் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.

 இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தியாகதுருகம்-மணலூர்பேட்டை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜீ, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதும் உடன்பாடு ஏற்படவில்லை. இதன்பின்னர் மதியம் 2 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்ட   86 பேரை போலீசார் கைது செய்து வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். பின்னர் அவர்களை சமுதாய நலக்கூடத்துக்கு கொண்டு சென்று மாலையில் விடுவித்தனர்.  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடந்த இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் குழந்தைவேல் ரிஷிவந்தியம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்ட 86 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : Amma ,clinic opening ceremony ,village ,Rishivandiyam Keelpadi ,
× RELATED புவனாம்மா அஞ்சல் அலுவலகத்திற்கே நான் அம்மா