வால்பாறை, ஆக.29: வால்பாறை பகுதியில் கடந்த சில தினங்களாக அடைமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இடைவிடாது பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருகிறது. கடும் குளிர் மற்றும் சாரல் மழை தொடர்ந்து நீடிக்கிறது. வால்பாறை பகுதியில் சிற்றோடைகளில் மீண்டும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்தது.
அக்காமலை, கருமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் கருமலை மற்றும் நடுமலை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரைச்சல் பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. கடும் மூடு பனியும் நிலவுகிறது. கூழாங்கல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. வால்பாறை பகுதியில் அதிகபட்சமாக மேல் நீராறு பகுதியில் 58 மி.மீ மழை பதிவாகி உள்ளது. சோலையார் அணை 48, வால்பாறை 32, லோயர் நீராறு 38 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
