×

சின்கியுபீல்ட் கோப்பை செஸ் பிரக்ஞானந்தா, கரவுனா 8 சுற்று முடிவில் முதலிடம்

சின்கியுபீல்ட்: சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டியின் 8வது சுற்று முடிவில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, அமெரிக்க வீரர் பேபியானோ கரவுனா, முதலிடத்தில் நீடிக்கின்றனர். அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில், செயின்ட் லூயிஸ் நகரில் சின்கியுபீல்ட் கோப்பைக்கான செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. 9 சுற்றுகள் கொண்ட இத் தொடரின், 8வது சுற்று போட்டிகள் நேற்று நடந்தன. தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் வெஸ்லி ஸோ உடன் மோதினார். இப்போட்டியில் இருவரும் சமபலத்துடன் மோதியதால், டிராவில் முடிந்தது.

தமிழகத்தை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் லெவோன் ஆரோனியன் இடையில் நடந்த மற்றொரு போட்டியும் டிரா ஆனது. 8 சுற்றுகள் முடிவில், பிரக்ஞானந்தாவும், அமெரிக்க வீரர் பேபியானோ கரவுனாவும், 5 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கின்றனர். அமெரிக்காவின் வெஸ்லி ஸோ, லெவோன் ஆரோனியன் 4.5 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளனர். போலந்து வீரர் துடா ஜேன் கிறிஸ்டாஃப், அமெரிக்க வீரர் சாமுவேல் செவியன் தலா 4 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் உள்ளனர். குகேஷ், 3.5 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளார். அவருக்கு பின், பிரான்ஸ் வீரர் அலிரெஸா ஃபிரோஸா 3 புள்ளிகளுடனும், உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துஸட்டோரோவ் 2.5 புள்ளிகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Tags : Sinquefield Cup Chess ,Praggnanandha ,Carauna ,Sinquefield ,Nadu ,Fabiano Carauna ,St. Louis, Missouri, USA ,
× RELATED கான்வே இரட்டை சதம்: நியூசிலாந்து 575 ரன்கள் குவிப்பு