×

தமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் அலங்கார பொருட்கள் விற்பனை களைகட்டியது: கோயில்களில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு; ஆன்மிக கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது

சென்னை: விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அலங்கார பொருட்கள் விற்பனை நேற்று மாலை முதல் களை கட்டியது. அதே நேரத்தில் பூ, பழம், வாழை இலை விலை அதிகரித்து காணப்பட்டது. நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே விநாயகர் கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. இதற்காக விரிவான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் பூஜை பொருட்களை வாங்க நேற்று மாலை முதல் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. சென்னையை பொறுத்தவரை கோயம்பேடு, மயிலாப்பூர், புரசைவாக்கம், தி.நகர், திருவான்மியூர், பிராட்வே, வடபழனி, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் நேற்று காலை முதல் அதிகமாக காணப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சாலை ஓரத்தில் திடீர் கடைகள் அமைக்கப்பட்டு பொரி, ஆப்பிள், ஆரஞ்ச், சாத்துக்குடி, மக்காச்சோளம், கொய்யா பழங்கள், கரும்பு, தென்னங்கீற்று ஆகியவை விற்பனை செய்யப்பட்டன. கடந்த ஆண்டை விட விலை அதிகமாக இருந்த போதிலும் அதை பற்றி பொருட்படுத்தாமல் பொருட்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

மேலும் பூ, பழம் விற்பனை படுஜோராக நடைபெற்றது. அதே நேரத்தில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள், பழம், வாழையின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சார்ந்த சில்லரை வியாபாரிகள், அருகில் உள்ள மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த சில்லரை வியாபாரிகள் அதிக அளவில் குவிந்து இருந்ததை பார்க்க முடிந்தது. அதே நேரத்தில் விசேஷ தினம், முகூர்த்தம் என்று அடுத்தடுத்த நிகழ்வுகள் வருகிறது.

இதனால் அனைத்து பொருட்களும் விலை உயர்ந்திருந்ததை பார்க்க முடிந்தது. அதாவது கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ.900ருந்து ரூ.1,300 ஆக உயர்ந்திருந்ததை பார்க்க முடிந்தது. ஜாதிமல்லி, முல்லை ரூ.750லிருந்து ரூ.900க்கும், ஐஸ் மல்லி ரூ.1100 ஆகவும், கனகாம்பரம் ரூ.500லிருந்து ரூ.2000க்கும், சாமந்தி ரூ.200லிருந்து ரூ.350க்கும், சம்பங்கி ரூ.200லிருந்து ரூ.500க்கும், அரளி பூ ரூ.200லிருந்து ரூ.350க்கும், பன்னீர் ரோஸ் ரூ.160லிருந்து ரூ.180க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.160 இருந்து ரூ.280 ஆகவும் விற்பனையானது. இன்று காலை முதல் மேலும் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அதனால், பூக்கள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுபோல் பழங்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ ஆப்பிள் ரூ.140 இருந்து ரூ.180க்கும், சாத்துக்குடி ரூ.60லிருந்து ரூ.80, விளங்காய் ரூ.70லிருந்து ரூ.90, பேரிக்காய் ரூ.100லிருந்து ரூ.120, மாதுளை ரூ.150லிருந்து ரூ.180, ஆரஞ்சு ரூ.40லிருந்து ரூ.60, வாழைப்பழம் ரூ.50லிருந்து ரூ.70 என விலை உயர்ந்திருந்தது. மொத்த மார்க்கெட்டில் தான் இந்த விலை. இதனை வாங்கி கடைகளில் விற்பவர்கள் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை கூடுதலாக விற்பனை செய்தனர். இதே போல வாழை இலையும் கடுமையாக அதிகரித்து காணப்பட்டது.

ஒரு தலைவாழை இலை ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டது. விநாயகர் சிலைகள் ரூ.50 முதல் ரூ.1000 வரையில் விற்பனை செய்யப்பட்டது. குடைகள் ரூ.50 முதல் விற்கப்பட்டது. ஒரு கட்டு அருகம்புல், எருக்கம் பூ மாலை ரூ.50 வரை விற்கப்பட்டது. மேலும் நகரின் பல்வேறு இடங்களில் சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடத்தப்பட உள்ளது. குறிப்பாக 3 அடி முதல் 15 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட உள்ளன.

* 1,519 விநாயகர் சிலைகள் இன்று பிரதிஷ்டை: சென்னையில் 16,500 போலீசார் பாதுகாப்பு
விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான முறையில் கொண்டாட சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், பிரவேஷ்குமார், கார்த்திகேயன் மேற்பார்வையில் இனை கமிஷனர்கள் மற்றும் துறை கமிஷனர்கள் நேரடி கண்காணிப்பில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 16,500 போலீசார் மற்றும் 1500 ஊர்க்காவல் படை வீரர்கள் என மொத்தம் 18 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை பெருநகரம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் அமைக்க இந்து அமைப்புகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் 1,519 சிலைகள் அமைக்க இந்து அமைப்புகளுக்கு காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சிலைகள் அமைக்கும் பணியில் இந்து அமைப்புகள் இடங்களில் அலங்கார பணிகளில் ஈடுபட்டனர். சிலைகள் அமைக்கும் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் படி பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. போலீசார் அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் அமைக்க வேண்டும். சிலைகளை தடை செய்யப்பட்ட மற்றும் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் சிலைகள் அமைக்க முயற்சிகள் எடுத்தால் சம்பந்தபட்ட நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து சென்னை பெருநகர காவல் துறையில் உள்ள 105 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Ganesha Chaturthi ,Chennai ,
× RELATED 49வது புத்தகக்காட்சியை சென்னை...