- துணை
- சபாநாயகர்
- பிச்சாண்டி
- சென்னை
- விட்டல்பாய் படேல்
- இந்தியா
- புது தில்லி
- தமிழ்நாடு சட்டமன்றம்
- துணை பேச்சாளர்
சென்னை: இந்தியாவின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகராக விட்டல்பாய் படேல் பொறுப்பேற்றதன் நூற்றாண்டு விழா புதுடெல்லியில் நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசியதாவது: விட்டல்பாய் படேல் இந்திய அரசியல் மேதையாகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும் திகழ்ந்தார் என்பதுடன், அவர் சர்தார் வல்லபாய் படேலின் மூத்த சகோதரரும் ஆவார். இந்தியாவின் சட்டமன்ற வரலாற்றில் முன்னோடியாகவும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் செல்வாக்கு மிக்க நபராகவும் இருந்தவர்.
இந்தியா உலகின் மிகப்பெரிய மக்களாட்சியாக அங்கீகரிக்கப்படுகின்ற போதிலும், அண்மைக் காலங்களில் மக்களாட்சியின் பின்னடைவு குறித்து சில பார்வையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அதன் தேர்தல்களின் எண்ணிக்கையும், அதன் மக்களாட்சி அமைப்புமுறையின் செயல்பாட்டில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கையும் உலகளவில் மிகப்பெரிய மக்களாட்சி என்ற அதன் நிலைபாட்டை உறுதிப்படுத்துகின்றன.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் உண்மையான மக்களாட்சிக்கு எதிரானது என்று அவர் கருதிய சமூக சமத்துவமின்மையையும் ஒடுக்குமுறையையும் எதிர்த்துப் போராடுவதில் வேரூன்றிய திமுகவின் அரசியல் சித்தாந்தத்தை வலுவாக நிலைநிறுத்தினார், அந்தவகையில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட சித்தாந்தத்தையும், அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் அடிச்சுவட்டையும் பின்பற்றி, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வரையறைக்குட்பட்டு,
மக்களாட்சி வழியில் மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்து, சமூக நீதியை எய்துதல், சமூகத்தின் விளிம்புநிலை மக்களை மேம்படுத்துதல், ஏற்றத்தாழ்வுகளை ஒழித்தல், பெண்களுக்கு அதிகாரமளித்தல், ‘அனைவருக்கும் அனைத்தும்’ ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ‘திராவிட மாடல்’ அரசைத் திறம்பட வழிநடத்தி வருகிறார்.
மக்கள், தேர்தல்களில் வாக்களிக்கத் தவறுவது அதிகரித்து வருவது உண்மையிலேயே ஒரு பிரச்சனையாக இருந்தாலும், வாக்காளர்களை வாக்களிக்குமாறு வலியுறுத்தும் குழுக்கள், குடிமை முயற்சிகள், ஆலோசனை அமைப்புகள் போன்றவற்றின் பங்கேற்பு உண்மையில் அதிகரித்து வருவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாடு விடுதலையடைந்த பின்னர், வயது வந்தோர் அனைவருக்குமான வாக்குரிமையைக் கொண்டு நாடாளுமன்ற அமைப்பை உருவாக்கும் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அப்போது தொடங்கியதுதான் இந்தியாவின் மக்களாட்சிப் பயணமாகும்.
பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களான, காந்தி, நேரு, வல்லபாய் படேல் மற்றும் ஏனைய தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களால் உருவாக்கப்பட்டு பரிசாக நமக்களிக்கப்பட்ட மக்களாட்சி தீபத்தை, இந்திய மக்களாகிய நாம் நாளதுவரையில் நமது கைகளில் ஏந்திப் பாதுகாத்து வருகிறோம். எனவே, மக்களாட்சி அரசுகளின் உண்மையான கருத்தியல் கோட்பாடுகளைத் திறம்படப் போற்றி, வலுப்படுத்தி, அவற்றை நமது இளைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்குக் கடத்துவது ஒவ்வொரு இந்தியரின், குறிப்பாக நமது தலைவர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் முழுப் பொறுப்பாகும்.
