- எடப்பாடி பழனிசாமி
- நயினார்
- நாகேந்திரன்
- சென்னை
- முதலமைச்சர்
- ஐயா
- ஸ்டாலின்
- ஆதிமுக பொதுச் செயலாளர்
- எடப்பாடி பழனிசாமி
- நயானா
- நஜேந்திர பாஜக
- நயினார் நாகேந்திரன்
சென்னை: எஸ்ஐஆர் பணிகளை எதிர்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதியில் அதிக அளவிலான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்த பணிகளுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தொகுதிகளிலும் வாக்காளர் நீக்கம் குறைவாகவே உள்ள தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் எஸ்ஐஆர் பணிகளுக்குப் பிறகு ஆண்கள் 1,35,654 பேரும், பெண்கள் 1,31,693 பேரும், இதரர் 27 பேரும் என மொத்தம் 2,67,374 பேர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி தொகுதியைப் பொறுத்தவரை உயிரிழந்தவர்கள் என்ற அடிப்படையில் 9323 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
குடியிருப்பில் இல்லாதவர்கள் அல்லது முகவரி மாற்றம் செய்தவர்கள் என்ற அடிப்படையில் 14,950 பேர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், இரட்டை பதிவுகள் என 2102 பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதாவது மொத்தம் 26,375 பேர் நீக்கப்பட்டுள்ளனர். சேலத்தில் வாக்குச்சாவடி விவரத்தைப் பொறுத்தவரை சீரமைப்புக்கு முன்பு 3264 வாக்குச்சாவடிகள் இருந்தன. இப்போது சீரமைப்பிற்கு பிறகு அது 3468ஆக உயர்ந்துள்ளது. அதாவது கூடுதலாக 204 வாக்குச்சாவடிகள் சேர்க்கப்பட்டுள்ளன. எடப்பாடி தொகுதியில் 325 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில், இப்போது 17 வாக்குச்சாவடிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
அதேபோன்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிட்ட நெல்லை சட்டமன்ற தொகுதி எஸ்.ஐ.ஆர்க்கு முன் 3,05,804 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்ஐஆர் பணிகளில் 42,119 பேர் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகு அங்கு 2,63,685 வாக்காளர்கள் உள்ளனர். அதாவது அங்கு 13.77% சதவீதம் பேர் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர். மறுபுறம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் சுமார் 1,03,812 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கொளத்தூரில் எஸ்ஐஆர் பணிகளுக்கு முன்பு 2,90,653 வாக்காளர்கள் இருந்தனர். இப்போது அங்கு 1,86,841 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். அதாவது அங்கு எஸ்ஐஆர் பணிகளில் சுமார் 35.71% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொகுதியான சேப்பாக்கம்- திருவல்லிக்கேனியில் எஸ்ஐஆர் பணிகளுக்கு முன்பு 2,40,087 வாக்காளர்கள் இருந்தனர். இந்த பணிகளில் 89,241 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இப்போது அங்கு 1,50,846 வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதாவது எஸ்ஐஆர் பணிகளால் அங்கு 37.17 சதவீத வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எஸ்ஐஆர் பணிகளை எதிர்த்தவர்கள் தொகுதிகளில் அதிக அளவிலான வாக்குகள் நீக்கப்பட்டிருப்பதும், ஆதரித்தவர்கள் தொகுதிகளில் குறைவான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது அரசியல் களத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
