×

தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 5,000 குழந்தைகளுக்கு டைப்-1 நீரிழிவு நோய் பாதிப்பு: ஆய்வில் கண்டுபிடிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு டைப்-1 நீரிழிவு நோய் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான டைப்-1 நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும், அதற்கான முறையான சிகிச்சைகளை அளிக்கும் வகையில் கடந்த ஆகஸ்ட் 2024ம் ஆண்டு மாநில அளவிலான டைப்-1 நீரிழிவு நோய் பாதிப்பு பதிவேடு தொடங்கப்பட்டன. இதற்காக சென்னை, தஞ்சாவூர், சேலம், கோவை உள்பட 7 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டன.

தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் இச்சேவையை தொடங்கிய ஓராண்டிலேயே 5064 குழந்தைகள் நோயின் பாதிப்பால் பதிவாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் இந்த பதிவேட்டில் பதிவுசெய்யப்படுகின்றனர். அதேபோல் சிகிச்சை தருவோருக்கு விழிப்புணர்வு, மாவட்ட வாரியாக நோய் பாதிப்பு, குழந்தைகளுக்கு தொடர் சிகிச்சை பதிவேடு செய்யப்படுகிறது. அரசு சுகாதார கொள்கையை வகுக்க தரவுகள் மற்றும் இன்சுலின் வழங்குவதை திட்டமிடுவது ஆகியவற்றை பதிவேடு உறுதிசெய்கின்றன.

இதுகுறித்து சுகாதார துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: குழந்தைகளின் உயிர்வாழ்வு விகிதத்தை உயர்த்தவும், சிகிச்சை தொடர்ச்சியை உறுதி செய்யவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் சுகாதார துறை தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் ஏழு அரசு மருத்துவக் கல்லூரிகளில் டைப்1 நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 13 புதிய மையங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதுடன், இதன் மூலம் பதிவேட்டை கூடுதலாக 13,000 குழந்தைகளுக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் சிகிச்சை மையங்கள் செயல்படுவதை அரசு இலக்காக நிர்ணயித்துள்ளது. இவ்வாறு கூறினர்.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் சோகம் ஒரே...