செயின்ட் லூயிஸ்: சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டியின் 4வது சுற்றில் நேற்று, இந்தியாவை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோர் மோதிய போட்டிகள் டிராவில் முடிந்தன. 4 சுற்றுகள் முடிவில் பிரக்ஞானந்தா 2ம் இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் செயின்ட் லூயிஸ் நகரில் சின்கியுபீல்ட் கோப்பைக்கான செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 4வது சுற்றுப் போட்டி ஒன்றில் தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, அமெரிக்க வீரர் சாமுவேல் செவியனுடனான போட்டியில் டிரா செய்தார்.
தமிழகத்தை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ், பிரான்ஸ் வீரர் வஷியர் லாக்ரேவ் இடையே நடந்த போட்டியும் டிரா ஆனது. அமெரிக்க வீரர் பேபியானோ கரவுனா, உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துஸட்டோரோவ் உடனான போட்டியில் வெற்றி பெற்றார். நேற்று நடந்த போட்டிகளில் இப்போட்டியில் மட்டுமே வெற்றி கிடைத்தது. இன்னும் 5 சுற்றுகள் நடக்கவுள்ள நிலையில், நேற்றைய நிலவரப்படி, அமெரிக்க வீரர் கரவுனா 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தா, அமெரிக்க வீரர் ஆரோனியன் ஆகிய இருவரும் தலா 2.5 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளனர். குகேஷ், வெஸ்லி, ஃபிரோஸா, வஷியர், செவியன் ஆகியோர் 2 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் உள்ளனர்.
* உலக யு20 மல்யுத்தம் இந்தியாவுக்கு 2 வெள்ளி
சாமோகோவ்: பல்கேரியாவில் யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. அதில் பெண்களுக்கான 55 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் ரீனா இறுதிப் போட்டியில் நேற்று அமெரிக்க வீராங்கனை எவரெஸ்ட் ஷியா லேடெக்கிடம் தோல்வியை தழுவினார். அதனால், ரீனா 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். அதேபோல் 76 கிலோ எடை பிரிவு இறுதி ஆட்டத்தில் மற்றொரு இந்திய வீராங்கனை பிரியா, உக்ரைன் வீராங்கனை நாடியா சோகோலோவ்ஸ்கா மோதினர். அதில் நாடியா வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்தியாவின் பிரியாவுக்கு வெள்ளி கிடைத்தது.
