- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ராதாகிருஷ்ணன்
- ஜனாதிபதி
- எடப்பாடி பழனிசாமி
- திருவண்ணாமலை
- திருவண்ணாமலை மாவட்டம்
- செய்யாறு
- வந்தவாசி
- ஆரணி
திருவண்ணாமலை: துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழ்நாட்டு எம்பிக்கள் கட்சி பேதமின்றி ஆதரவு அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த 15ம் தேதி செய்யாறு, வந்தவாசி, ஆரணி தொகுதிகளிலும், 16ம் தேதி திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர் தொகுதிகளிலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று முன்தினம் ஓய்வு எடுத்த அவர், நேற்று கலசபாக்கம் மற்றும் போளூர் தொகுதிகளில் பிரசார பயணம் மேற்கொண்டார்.முன்னதாக, நேற்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி: மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். மேலும், துணை ஜனாதிபதி என்பது சாதாரண விஷயம் அல்ல. எனவே, கட்சி பேதமின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எம்பிக்களும் அவரை வெற்றிபெற செய்ய ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து காரில் கிரிவலம் புறப்பட்டு சென்றார். எடப்பாடி பழனிசாமி வருகைக்காக சிவப்பு கம்பள விரிப்பு ஏற்பாடுகளை அதிமுகவினர் செய்தனர். கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதால் அதனை அகற்றினர்.

