×

கோவை செல்வபுரத்தில் பேருந்து லக்கேஜ் கதவு மோதி ஸ்கூட்டரில் சென்ற வாலிபர் பலி

கோவை, ஆக. 12: கோவை செல்வபுரத்தில் பஸ் லக்கேஜ் கதவு மோதி ஸ்கூட்டரில் சென்ற வாலிபர் பலியானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை டவுன் ஹால் ஹாஜி முகமது வீதியை சேர்ந்தவர் உமர் நாபிக் (30). யுபிஎஸ் பேட்டரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு உக்கடத்தில் இருந்து செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரது பின்னால் ஆம்னி பஸ் ஒன்று இடதுபுறம் லக்கேஜ் கதவு திறந்தவாறு சென்று கொண்டு இருந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் சத்தமிட்டு பஸ் டிரைவரிடம் தெரிவிக்க முயற்சி செய்தனர். ஆனால் பஸ் டிரைவருக்கு கேட்கவில்லை.

அவர் தொடர்ந்து பஸ்சை இயக்கியுள்ளார். சிறிது நேரத்தில் பஸ்சின் முன்புறம் சென்று கொண்டு இருந்த உமர் நாபிக் மீது அந்த கதவு மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்து உமர் நாபிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் பஸ்சை மடக்கி பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேற்கு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உமர் நாபிக்கின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Selvapuram, Coimbatore ,Coimbatore ,Umar Nafiq ,Haji Mohammed Road, Town Hall, Coimbatore ,UPS ,
× RELATED எஸ்ஐஆர் பணிகள்; பூர்வீக விவரங்கள் மீண்டும் ஆய்வு