- விஜய்
- தலித்துகள்
- திருமாவளவன்
- பெரம்பலூர்
- பெரம்பலூர் புதிய பஸ் ஸ்டாண்ட்
- விடுதலைப் புலிகள்
- தமிழ்நாடு கட்சி
- வி.கே.சி
பெரம்பலூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், ஆணவ படுகொலையை கண்டித்தும், தேசிய அளவில் தனி சட்டம் இயற்ற வலியுறுத்தியும் பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டு பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி கலந்து கொண்டு பேசியதாவது: ஆணவ படுகொலை தமிழ்நாட்டில் மட்டும் நடக்கும் சம்பவம் இல்லை, டெல்லியை சுற்றியுள்ள மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் குஜராத் போன்ற மாநிலங்களில் ஜாதி விட்டு, ஜாதி திருமணம் செய்பவர்களை துப்பாக்கியால் சுட்டு கொல்லுதல், கொடூரமான முறையில் தாக்கி கொல்லுதல் போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. இதனால் தான் தேசிய அளவில் சட்டம் இயற்ற வேண்டுமென விசிக 40 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
தலித்துகளுக்கு எதிராக இது போன்ற கொடூரங்கள் நடக்கும் போது புதிய கட்சிகள் வாய் திறப்பது கிடையாது. நடிகர் விஜய் இதனை கண்டிக்க கூட இல்லை. இந்த ஆணவ படுகொலை நடந்த பகுதிக்கு அருகில் தான் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்செந்தூர் சென்று வந்தார். ஆனால் சம்பவம் நடந்த பகுதிக்கு செல்லவில்லை, கண்டிக்கவும் இல்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ஆறுதலும் சொல்லவும் இல்லை.அதிமுக நினைத்திருந்தால் இந்த சம்பவத்தை வைத்து அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. ஏனென்றால் அவர்கள் தலித்துகள் ஓட்டுகளை எப்படியாவது வாங்கிவிடலாம் என நினைக்கிறார்கள். இந்த ஆணவ படுகொலைக்கு குறிப்பிட்ட ஜாதிதான் காரணம், குறிப்பிட்ட கட்சி தான் காரணம், குறிப்பிட்ட ஆட்சி தான் காரணம் என நான் பேசவில்லை. பாஜ தான் காரணம் எனவும் சொல்லவில்லை. ஆர்.எஸ்.எஸ் உருவாகி 100 ஆண்டுகள் தான் ஆகிறது. ஆனால் ஆயிரம் ஆண்டுகளாக இந்த காட்டு மிராண்டித்தனமான செயல்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
அண்ணா, ஆலய நுழைவு சட்டம் இயற்றினார். கலைஞர், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் இயற்றினார். அதே போல் ஆணவ கொலைக்கு தனி சட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இயற்ற வேண்டும். தயக்கம் தேவையில்லை, அச்சம் தேவையில்லை. அண்ணாவை போல், கலைஞரை போல், தைரியமாக ஆணவ படுகொலை தடுப்பு சட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வரவேண்டும். மீண்டும் நீங்கள் முதலமைச்சராக அரியணையில் அமர்வீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.
