மேட்டுப்பாளையம், ஆக. 11: சிறுமுகை சாலையில் கார் மோதியதில் புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேட்டுப்பாளையம் – சிறுமுகை சாலையில் சங்கர் நகர், அறிவொளி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இப்பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வகை வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி இப்பகுதிக்கு வருவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை புள்ளி மான் அறிவொளி நகர் அருகே சாலையை கடக்க முயற்சித்துள்ளது. அப்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து அதிவேகமாக சென்ற கார் சாலையை கடக்க முயன்ற புள்ளி மான் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது.
இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிக்குமார் தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று விபத்தில் பலியான புள்ளி மானின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
