×

கனடா ஓபன் டென்னிஸ் விக்டோரியா சாம்பியன்: 18 வயதில் சாதனை

டொரன்டோ: கனடா ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் கனடா வீராங்கனை விக்டோரியா எம்போகோ (18) அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். கனடாவில் கனடா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வந்தன. இப்போட்டியின் அரை இறுதியில் டென்மார்க் வீராங்கனை கிளாரா டாசனை வீழ்த்தி ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரையிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபாகினாவை வீழ்த்தி, கனடா வீராங்கனை விக்டோரியா வனேஸா எம்போகோ (18) இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இந்நிலையில், விக்டோரியா – நவோமி இடையிலான இறுதிப் போட்டி நேற்று நடந்தது. முதல் செட்டில் அநாயாசமாக ஆடிய ஒஸாகா 6-2 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். இருப்பினும் அடுத்து நடந்த இரு செட்களையும் துள்ளலுடன் அபாரமாக ஆடிய விக்டோரியா, 6-4, 6-1 என்ற புள்ளிக்கணக்கில் வசப்படுத்தினார். இதனால் வெற்றி வாகை சூடிய அவர் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார். இந்த வெற்றியை அடுத்து, மகளிருக்கான டபிள்யுடிஏ ஒற்றையர் தரவரிசைப் பட்டியலில், தன் வாழ்நாள் சாதனையாக, 8ம் இடத்தை விக்டோரியா பிடித்துள்ளார்.

* ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஷெல்டனுக்கு மகுடம்
கனடா ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நேற்று, அமெரிக்க வீரர் பென் ஷெல்டன் (22), ரஷ்ய வீரர் கரேன் காஷனோவ் (29) மோதினர். துவக்கம் முதல் இரு வீரர்களும் சளைக்காமல் ஆக்ரோஷமாக மோதினர். டைபிரேக்கர் வரை நீண்ட முதல் செட்டை, 7-6 (7-5) என்ற புள்ளிக் கணக்கில் காஷனோவ் கைப்பற்றினார். 2வது செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் ஷெல்டன் எளிதில் வசப்படுத்தினார். அதைத் தொடர்ந்து வெற்றியைத் தீர்மானிக்கும் வகையில் நடந்த 3வது செட்டை, 7-6 (7-3) என்ற புள்ளிக் கணக்கில் டைபிரேக்கரில் ஷெல்டன் கைப்பற்றினார். அதனால் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஷெல்டன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

Tags : Canada Open Tennis Victoria ,Toronto ,Victoria Mbogo ,Canada Open Tennis ,Canada ,
× RELATED டி20 உலக கோப்பைக்கு சூர்யகுமார் யாதவ்...