மதுரை: போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கும், ஒன்றிய அரசின் இ-சலான் செயலியில் தமிழ் மொழியை இணைக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒன்றிய அரசின் இ-சலான் செயலி மூலம் சாலைகளில் அதிக வேகமாகச் செல்லும் வாகனங்கள், சிவப்பு விளக்கு தாண்டுதல் அல்லது உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு டிஜிட்டல் முறையில் போக்குவரத்து அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்படுகிறது. மோட்டார் வாகனச் சட்டம் 1988 மூலம் இ-சலான் செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டிஜிட்டல் மயம் மற்றும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 2016-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் இந்த செயலி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்திய அளவில் தமிழகத்திலிருந்து தான் இ-சலான் செயலி மூலம் அதிக அபராதத் தொகை செலுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த இ-சலான் செயலியில் தமிழ் மொழி இடம்பெறவில்லை. ஆங்கிலம், இந்தி, மலையாளம் மற்றும் மராத்தி ஆகிய 4 மொழிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. எனவே, ஒன்றிய அரசின் இ-சலான் செயலியில் தமிழ் மொழியை இணைக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
