×

புதுக்கோட்டை அருகே நள்ளிரவில் வீடு புகுந்து போலீஸ்காரரின் தாய், பாட்டியிடம் செயின் பறிப்பு: தந்தை மீது உருட்டுக்கட்டை தாக்குதல்

கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கோமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமையன் (60). ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை ஊழியர். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் கவியரசன், திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். 2வது மகன் கலைவாணன், கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டையில் உள்ள தனியார் மதுபான ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ராமையன், காற்றுக்காக பின்பக்க கதவை திறந்து போட்டு குடும்பத்துடன் தூங்கிகொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் முன்பக்க காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து மர்ம நபர்கள் 3 பேர், பின்பக்கம் வழியாக வீட்டிற்குள் புகுந்துள்ளனர். அங்கு தூங்கி கொண்டிருந்த ராமையன் மனைவி லட்சுமியின் 5 பவுன் , மாமியார் பவுனம்பாளின் 4 பவுன் தாலி செயின்களை பறித்துள்ளனர்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு எழுந்த ராமையனை, மர்மநபர்கள் உருட்டு கட்டையால் தலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடினர். புகாரின்படி கந்தர்வகோட்டை போலீசார், தலையில் பலத்த காயத்துடன் கிடந்த ராமையனை மீட்டு கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : Pudukkottai ,Kandarvakota ,Ramayan ,Pudukkottai District Kandarvakota Union Komapuram Village ,Lakshmi ,Kaviarasan ,Trichy District Armed Forces ,
× RELATED அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் 42 சவரன்,...