×

தனித்துவமாக வரையறுக்கப்பட்ட தமிழக மாநில கல்விக் கொள்கை முதல்வர் இன்று வெளியிடுகிறார்

சென்னை: தமிழகத்துக்காக தனித்துவமாக வரையறுக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் வெளியிடுகிறார். திமுக ஆட்சிப்பொறுப்பேற்றதும், சட்டப்பேரவையில் 2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது, வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப மாநிலத்துக்கென, தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழுவை அரசு அமைக்கும் என முதல்வர் அறிவித்தார்.

அதன்படி, தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்கவும், அது குறித்து ஆய்வு செய்யவும், டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் கொள்கை வரையறைக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் உறுப்பினர்களாக இராம சீனுவாசன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், முனைவர் அருணா ரத்னம், ஜெயஸ்ரீ தாமோதரன், துளசிதாசன், டி.எம்.கிருஷ்ணா, பாலு, ப்ரீடாஞானராணி, பேராசிரியர் பழனி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். குழுவின் உறுப்பினர் செயலராக முன்னாள் தொடக்க கல்வி இயக்குநர் கருப்பசாமி நியமிக்கப்பட்டார்.

தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் சங்கங்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்புகளிடம் நேரடியாக கருத்துகளை இந்த குழு கேட்டறிந்தது. அவர்கள் தெரிவித்த கருத்துகளின் பேரில் 600 பக்கம் கொண்ட அறிக்கையை தயார் செய்த குழு, கடந்த 2024 ஜூலையில் முதல்வரிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை நடக்க இருக்கிற, முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்று வாழ்த்து தெரிவிக்க உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிடுகிறார். அதன் பின்னர் அதன் மீது கல்வியாளர்கள், பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்படும்.

Tags : Chief Minister ,Tamil Nadu ,Chennai ,M.K. Stalin ,Anna Centenary Library ,DMK ,
× RELATED ரயில் கட்டண உயர்வை உடனடியாக ரத்து...