×

ஆசிய கோப்பை கூடைப்பந்து ஜோர்டானிடம் வீழ்ந்த இந்தியா

ஜெட்டா: ஆசிய கோப்பை கூடைப் பந்து போட்டியில் ஜோர்டான் அணியிடம் இந்தியா தோல்வியை தழுவியது. சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 31வது ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 16 அணிகள் மோதுகின்றன. அவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறும். 2 மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் தகுதிச் சுற்றில் மோதி, அதில் வென்றால் காலிறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், குரூப் சி-யில் இடம்பெற்றுள்ள இந்தியா – ஜோர்டான் அணிகள் முதல் போட்டியில் களமாடின. இப்போட்டியில் அபாரமாக செயல்பட்ட ஜோர்டான் வீரர்கள் 91 புள்ளிகள் எடுத்தனர். இந்தியா, 84 புள்ளிகள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. மற்றொரு போட்டியில் சீனா – சவுதி அரேபியா அணிகள் மோதின. இப்போட்டியில் அசத்தலாய் ஆடிய சீன வீரர்கள், 93-88 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி வாகை சூடினர். இதையடுத்து, இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கும் அடுத்த போட்டியில் இந்தியா – சீனா அணிகள் மோதுகின்றன. இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில், குரூப் சி-யில், ஜோர்டான் முதலிடத்திலும், சீனா 2ம் இடத்திலும் உள்ளன. சவுதி அரேபியா 3, இந்தியா 4வது இடங்களில் உள்ளன.

Tags : India ,Jordan ,Asian Cup ,Jeddah ,31st Asian Cup basketball tournament ,Jeddah, Saudi Arabia ,
× RELATED கான்வே இரட்டை சதம்: நியூசிலாந்து 575 ரன்கள் குவிப்பு