×

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க திட்டம்? இன்று முடிவு அறிவிப்பு

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறக்க வேண்டும், பிரதமர் மோடி அல்ல என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், வரும் 28ம் தேதி நடக்கும் திறப்பு விழாவை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளன. டெல்லியில் 96 ஆண்டுகள் பழமையான நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக, சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் ரூ.970 கோடியில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும் 28ம் தேதி பிற்பகல் 12 மணிக்கு நடப்பதாகவும், பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பிதழும் தயாராகி உள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. நாட்டின் முதல் குடிமகன் என்ற வகையில் ஜனாதிபதிதான் நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் வரும் 28ம் தேதி நடக்கும் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் விழாவில் பங்கேற்கவில்லை என்பதை பகிரங்கமாக அறிவித்துள்ளன.

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரைன் தனது டிவிட்டரில், ‘நாடாளுமன்றம் என்பது வெறும் புதிய கட்டிடம் அல்ல. இது பழைய மரபுகள், மதிப்புகள், முன்னுதாரணங்கள் மற்றும் சட்டவிதிகளின் ஸ்தாபனம். இது இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம். இதெல்லாம் பிரதமர் மோடிக்கு புரியாது. அவரைப் பொறுத்த வரையில், புதிய கட்டிட திறப்பு விழாவானது நான், எனது, என்னால் என்பதாகத்தான் இருக்கும். ஆகவே நாங்கள் பங்கேற்கவில்லை’ என கூறி உள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் விழாவில் பங்கேற்காது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். இதே போல, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் விழாவை புறக்கணிக்க இருப்பதாகவும், இதுதொடர்பாக ஆலோசிப்பதாகவும், இன்று முடிவு அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

* அழைப்பிதழ் தயார்
மக்களவை செயலகம் வெளியிட்டு உள்ள அதிகாரப்பூர்வ அழைப்பிதழில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில், பிரதமர் மோடியால் புதிய நாடாளுமன்ற கட்டிடம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி மே 28ம்தேதி மதியம் 12 மணியளவில் நடைபெறும். நாடாளுமன்ற மக்களவை பொது செயலாளர் உத்பல் குமார் சிங், இந்த அழைப்பிதழை எம்.பி.க்கள் உள்பட பல்வேறு அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ளார்.

The post புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க திட்டம்? இன்று முடிவு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Opposition ,New Delhi ,President ,Modi ,Parliament ,Dinakaran ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி