புதிய இந்தியா

2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்தும் நோக்கில், காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்தக் கூட்டத்தின் முக்கிய அம்சமாக, தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணியை இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி ‘இந்தியா’ (INDIA) என்று அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தற்போது அறிவித்துள்ள கூட்டணியின் பெயரை (இந்தியா) போன்று, கடந்த காலங்களில் மக்களவைத் தேர்தலுக்கு முன் கூட்டணியின் பெயர் முன்னெடுக்கப்பட்டதில்லை.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து எடுத்துள்ள இந்த முடிவையும், அக்கட்சிகள் அனைத்தும் மீண்டும் ஒன்றுகூடி முக்கிய ஆலோசனைகள் மேற்கொண்டுள்ளதையும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிரான உறுதியான நடவடிக்கையாகவே அரசியல் ஆலோசகர்கள் கருதுகின்றனர். எதிர்க்கட்சிகளின் இந்த செயல்பாடு நல்ல தொடக்கமாக இருந்தாலும், பாஜகவை வீழ்த்த அவை இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பது நிதர்சனமான உண்மை. அதற்கான பணிகளை தீவிரமாக செய்யவும் தொடங்கியுள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது. அங்கு அடுத்தகட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன. தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில் தங்களுக்குள் நிலவும் சிக்கல்களுக்கு 2024 மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாவது எதிர்க்கட்சிகள் தீர்வு காண வேண்டியது நல்லது. பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் தங்களது பிரசாரங்களில் பாரத் என்ற வார்த்தையை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயரிட்டுள்ளதன் மூலம், பாரத்துக்கும், இந்தியாவுக்கும் இடையேயான வேறுபாட்டை மிகவும் சாதுரியமாக ராகுல்காந்தி நீக்கி உள்ளார்.

பாட்னாவில் கடந்த மாதம் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் 16 கட்சிகளே பங்கேற்றிருந்த நிலையில், பெங்களூருவில் நடைபெற்று முடிந்துள்ள கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற்றுள்ளது அவர்களின் ஒற்றுமைக்கு நல்ல சான்று. இது காங்கிரஸ், திரிணாமுல், ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகளிடையே நிலவிய கருத்து வேறுபாட்டையும் நீக்கியுள்ளது. அவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றுவது காங்கிரஸின் இலக்கு அல்ல. அரசியலமைப்பு சட்டத்தையும், சமூக நீதியையும் பாதுகாப்பதே அதன் நோக்கம் என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டுவாக்கில் பிரதமர் மோடிக்கு இருந்த செல்வாக்கு தற்போது இல்லை. ஊழலை கடுமையாக எதிர்ப்பதாக கூறிக்கொள்ளும் பிரதமர் தலைமையில் டெல்லியில் நடந்த 38 இயக்கங்களின் கூட்டத்தில் பங்கேற்ற பல தலைவர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது சாதுர்யமாக மறக்கப்பட்டுள்ளது. இதை எதிர்க்கட்சிகள் தங்கள் பிரசாரத்தில் நிச்சயம் முன்னெடுக்கும். தனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருபோதும் ஒன்றிணைய முடியாது என்று பிரதமர் மோடி எப்போதும் கூறி வருகிறார். ஆனால் அவரது இக்கூற்றை பொய்யாக்கும் விதத்தில், எதிர்க்கட்சிகள் தற்போது ஒருங்கிணைந்துள்ளன. இதுவே பாஜவுக்கு மிகப்பெரிய பின்னடைவு. எதிர்க்கட்சிகளின் இந்த ஒற்றுமையால் நிச்சயம் புதிய இந்தியா பிறக்கும் என்பதில் ஐயமில்லை.

The post புதிய இந்தியா appeared first on Dinakaran.

Related Stories: