சென்னை: உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய அளவில் 2-வது இடம், இதய மாற்று அறுவை சிகிச்சையில் முதல் இடம் பிடித்து தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டுக்கான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான அறிக்கையை ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி 2023 ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரையில் 16,542 பேர் உடல் உறுப்பு தானம் அளித்துள்ளனர். அதில் உயிருடன் உள்ளவர்கள் 15,436 பேரும், மரணம் அடைந்தவர்கள் 1099 பேர் ஆகும். கடந்தாண்டு மட்டும் 18,378 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன.
இதில் 13,426 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும், 4491 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும், 221 இதய மாற்று அறுவை சிகிச்சையும், 197 நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையும், 27 கணையம் மாற்று அறுவை சிகிச்சையும், 16 சிறு குடல் மாற்று அறுவை சிகிச்சையும் நடைபெற்றுள்ளது. இறந்தபின்பு உறுப்பு தானம் செய்தவர்களை பொறுத்த வரையில் தெலங்கானாவில் 252 பேரும், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் தலா 178 பேரும் உறுப்பு தானம் அளித்துள்ளனர். இறந்தவர்களிடமிருந்து பெறப்பட்ட உடல் உறுப்புகளை காத்திருப்பவர்களுக்கு அளிக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை பொறுத்தவரையில் தமிழகத்தில் 595 அறுவை சிகிச்சைகளும், தெலங்கானாவில் 546 அறுவை சிகிச்சைகளும், கர்நாடகாவில் 471 அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகத்தில்தான் இறந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து உறுப்புகளும் காத்திருப்பவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இறந்தவர்களிடமிருந்து பெறப்பட்ட 178 உறுப்புகளும், காத்திருப்பவர்களுக்கு வெற்றிகரமாக அளிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் 252 உடல் உறுப்புகள் தரப்பட்டிருந்தாலும் 200 உடல் உறுப்புகள் மட்டுமே காத்திருப்பவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை பொறுத்தவரை சிறுநீரகம் 1633, கல்லீரல் 1320, இதயம் 70, நுரையீரல் 55, கணையம் 5, சிறுகுடல் 5 ஆகும். அதன்படி அதிக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த மாநிலங்களின் பட்டியலில் இதய மாற்று அறுவை சிகிச்சையில் முதல் இடத்தையும், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், சிறு குடல் ஆகிய அறுவை சிகிச்சையில் 2வது இடத்தையும், கணையம் மாற்றும் அறுவை சிகிச்சையில் 3வது இடத்தையும் பிடித்து தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.
The post உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய அளவில் 2வது இடம் பிடித்து தமிழ்நாடு சாதனை: இதய மாற்று அறுவை சிகிச்சையில் முதலிடம்; ஒன்றிய சுகாதார அமைச்சகம் அறிக்கை appeared first on Dinakaran.