சிறுமிக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்படவில்லை; தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர் தவறான தகவல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

சென்னை : சென்னை, இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்து செய் யும் நிலையம் மற்றும் பண்டக சாலை தலைமை அலுவலகத்தில், இந்திய மருத்துவ முறை மருந்துகள் உற்பத்தி செய்யும் முறையை ஆய்வு செய்து, பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: சிதம்பரம் பிரச்னையை பொறுத்தவரை ஆளுநர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சிதம்பரத்தில் உள்ள சிறுமிக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவலை சொல்லியிருந்தார். உடனடியாக மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் தான் செய்யப்பட்டது.

இருவிரல் பரிசோதனை செய்யப்படவில்லை என்று மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. தொடர்ந்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இப்பிரச்னை தொடர்பாக விசாரித்து வருகிறது. மருத்துவர்களும் விசாரணை அலுவலர்களிடம் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படிதான் மருத்துவமும், பரிசோதனைகளும் செய்யப்படுகிறது. சட்டத்திற்கு அப்பாற்பட்டு இருவிரல் பரிசோதனை செய்யப்படவில்லை. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அலுவலர் ஆனந்த், உண்மையை கருத்தில் கொள்ளாமல் யாரையோ திருப்திபடுத்துவதற்காக தவறான கருத்தை கூறியுள்ளார். ஒரு ஆணையம் உண்மைக்கு புறம்பான கருத்துகளை வெளியிடுவது தவறான செயலாகும்.

ஆணையங்கள் இருப்பது என்பது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்கும், நேர்மையான விசாரணையின் மூலம் நல்ல தீர்வு காண்பதற்கும் தான். ஆனால் ஆணையத்தின் அலுவலர் விசாரித்த மருத்துவர்களிடம் எந்த பாதிப்பும் இருக்காது, அச்சம் கொள்ள தேவையில்லை, பரிசோதனைகளை முறையாக செய்திருக்கிறீர்கள் என்று கூறிவிட்டு வெளியில் வந்து தவறான செய்தியை கூறியுள்ளார். இது எதிர்காலத்தில் பெண் குழந்தைகளுக்கு அச்சத்தையும் பாதுகாப்பற்ற நிலையையும் உருவாக்கிவிடும்.இவ்வாறு அவர் கூறினார். நிகழ்வில் மருத்துவ துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, டாம்ப்கால் பொது மேலாளர் மோகன்ராஜ், மாநகராட்சி மண்டல குழு தலைவர் துரைராஜ், இம்ப்காப்ஸ் தலைவர் கண்ணன், இம்ப்காப்ஸ் செயலாளர் (பொறுப்பு) காதர் முகைதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post சிறுமிக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்படவில்லை; தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர் தவறான தகவல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: