×

சென்னையில் உள்ள கடைகளுக்கு தமிழில் பெயர்; காலக்கெடுவை எதிர்த்து சில்லரை வர்த்தகர்கள் சங்கம் வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னை: சென்னையில் உள்ள கடைகளின் பெயர்களை தமிழில் பெரிய எழுத்தில் வைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்தது. இதை எதிர்த்து மும்பையில் உள்ள அகில இந்திய சில்லரை வர்த்தகர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சங்கம் சார்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியம் ஆஜராகி கடைகளின் முன்பக்கம் வைக்கப்படும் விளம்பர பலகையில் தமிழில் வாசகம் பெரிய எழுத்தில் போட வேண்டும் என்று திடீரென்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இதை அனைத்து கடைகளும் அமல்படுத்த வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்த 15 நாள் மாநகராட்சி கெடு விதித்துள்ளது. இல்லாவிட்டால் ரூ. 1 லட்சம் அபராதம் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது சட்டவிரோதமானது. சில கடைகள் கிளைக் கடைகளை நடத்தி வருகிறது. ஒருவருக்கு பத்து கடைகள் இருந்தால் 10 கடைகளுக்கும் விளம்பர பலகைகள் புதிதாக அமைக்க லட்சக்கணக்கில் செலவாகும். குறுகிய காலத்தில் உடனே இதை அமைக்க முடியாது. இதுகுறித்து மாநகராட்சிக்கு மனு கொடுத்தும் இதுவரை மாநகராட்சி எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். இதை கேட்ட நீதிபதி, மனுதாரர் மனு மீது நான்கு வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும். அதுவரை எந்த விரைவான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டார்.

The post சென்னையில் உள்ள கடைகளுக்கு தமிழில் பெயர்; காலக்கெடுவை எதிர்த்து சில்லரை வர்த்தகர்கள் சங்கம் வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Retail Traders Association ,Madras High Court ,Court ,All India Retail Traders Association ,Mumbai ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்