நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி இலக்கு

*இதுவரை 110 மெட்ரிக் டன் உரம் விநியோகம்

*ரூ.63 கோடிக்கு பயிர் கடன் வழங்க முடிவு

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 1 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுஇதுவரை 110 மெட்ரிக் டன் உரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு ரூ.63 கோடிக்கு பயிர் கடன் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.காவிரி டெல்டா மாவட்டத்தின் கடைமடையாக நாகப்பட்டினம் உள்ளது. காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்தால் கடைமடை பகுதியான நாகப்பட்டினம் வந்து சேருவதற்குள் மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைந்து விடும். இதனால் கடந்த பல ஆண்டு காலமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் மும்போகம் சாகுபடி என்பது நடைபெறவில்லை.

கடந்த ஆண்டு மட்டும் மேட்டூர் அணையில் இருந்து முன்னதாக தண்ணீர் திறந்து விட்டதால், நாகப்பட்டினம் மாவட்டம் இலக்கை தாண்டி குறுவை சாகுபடி செய்தது. இதை தொடர்ந்து சம்பா சாகுபடியும் சிறப்பாக நடந்தது. அதே போல் இந்த ஆண்டும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 62 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
கர்நாடக அரசு போதுமான தண்ணீர் கொடுக்கவில்லை. இதனால் மேட்டூர் அணையில் இருந்து போதுமான நீர் கிடைக்கவில்லை.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பாதிப்படைந்தது. எஞ்சிய 32 ஆயிரம் ஏக்கரில் குறுவை பணிகள் நடந்துள்ளது. இதில் 6 ஆயிரம் ஏக்கரில் குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல், திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் குறுவை அறுவடை பணிகள் நிறைவு பெற்றதால் போர்வெல் உதவியுடன் சம்பா சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 109 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகிறது.

இது குறித்து வேளாண் இணை இயக்குநர் தேவேந்திரன் கூறியதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டிற்கு 1 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறுவை அறுவடை நிறைவு பெற்ற பகுதிகளான திருமருகல், திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் தீவிரமாக தொடங்கியுள்ளனர். சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதுமான அளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.

குறுகிய கால நெல் ரகங்கம் திருச்சி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கோவை ஆகிய இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்க 460 மெட்ரிக் டன் வரவழைக்கப்பட்டு இதுவரை 110 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவைக்கு ஏற்ப கூடுதலாக வரவழைக்கப்படும். விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.63 கோடிக்கு பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் அச்சம் அடையாமல் சம்பா சாகுபடியை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி இலக்கு appeared first on Dinakaran.

Related Stories: