மோடி ரோடு ஷோவில் சீருடையில் பங்கேற்ற மாணவர்கள் தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்: தலைமை ஆசிரியரிடம் 3 மணி நேரம் விசாரணை

கோவை: கோவையில் பிரதமர் கூட்டத்தில் சீருடையில் மாணவர்கள் பங்கேற்ற விவகாரம் தொடர்பாக தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியரிடம் 3 மணி நேரம் விசாரணையும் நடந்தது. கோவையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தோடு கூட்டமாக மாணவர்கள் சுமார் 50 பேர் நின்றனர். கட்டாயப்படுத்தி அவர்கள் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு சீருடையில் அழைத்து வரப்பட்டதாக தெரிகிறது. பள்ளியின் சார்பில் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கூறியதாக அந்த பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர். மாணவர்களுடன் ஆசிரியர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தேர்தல் பிரசார கூட்டத்தில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைக்கக்கூடாது என தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. ஆனால் பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில் கூட்டத்தை காண்பிப்பதற்காக அந்த பள்ளியில் இருந்து பள்ளி சீருடையில் மாணவர்களை பாஜவினர் அழைத்து வந்துள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி பாஜவினர் பள்ளி மாணவர்களை கூட்டத்திற்கு அழைத்து வந்தது தொடர்பாக அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கூட்டத்துடன் பள்ளி சீருடையுடன் மாணவர்கள் நிற்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகின.

இதையடுத்து, இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், குழந்தைகள் நல அலுவலர் மூலம் விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தலின் பேரில் பள்ளி நிர்வாகத்திடம் கூட்டத்திற்கு பள்ளி மாணவர்களை அழைத்து சென்றது குறித்து விளக்கம் அளிக்க கூறி நோட்டீஸ் நேற்று அளிக்கப்பட்டது. மேலும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள் அந்த பள்ளிக்கு நேரில் சென்றார். பள்ளி தலைமை ஆசிரியர் அழகுவடிவுவிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தினார். இந்த விசாரணை சுமார் 3 மணி நேரம் நடந்தது. இந்த விசாரணை அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட உள்ளது. இதையடுத்து, மாணவர்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post மோடி ரோடு ஷோவில் சீருடையில் பங்கேற்ற மாணவர்கள் தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்: தலைமை ஆசிரியரிடம் 3 மணி நேரம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: