இத்திட்டத்தினால் விழுப்புரம் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் மாவட்டத்தின் சமூக பொருளாதாரமும் மேம்படும். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது தொலைநோக்குப் பார்வையில் சென்னை ராஜீவ் காந்தி சாலையில் அமைக்கப்பட்ட டைடல் பூங்கா, தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட அடித்தளமாக அமைந்தது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மாநிலம் முழுவதும் பரவலாக அமைவதை உறுதி செய்திட, முதற்கட்டமாக விழுப்புரம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என 2021-2022ஆம் ஆண்டிற்கான திருத்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருச்சிற்றம்பலம் கிராமத்தில், 31 கோடி ரூபாய் செலவில், 63,000 சதுரஅடி பரப்பளவில், தரை மற்றும் நான்கு தளங்களுடன், குளிர்சாதன வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு, மின்தூக்கிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், தீ பாதுகாப்பு, கட்டட மேலாண்மை, மின் விளக்குகளுடன் கூடிய உட்புற சாலை, 24×7 பாதுகாப்பு, உணவகம் மற்றும் உடற்பயிற்சிக்கூடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இக்கட்டடத்தின் முதலாவது இடஒதுக்கீடு ஆணையை திருவாளர்கள் SUV Startup Space நிறுவனத்தின் திரு. எஸ். யுவராஜ் அவர்களிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு செயலாளர் திரு. வி. அருண் ராய், இ.ஆ.ப. டிட்கோ மேலாண்மை இயக்குநர் திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., டைடல் பார்க் மேலாண்மை இயக்குநர் டாக்டர். வி. ஜெய சந்திர பானு ரெட்டி, இ.ஆ.ப, ஆகியோர் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ரவிகுமார், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஆர்.லட்சுமணன், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி.பழனி, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post விழுப்புரம் மாவட்டத்தில் 31 கோடி ரூபாய் செலவில் 63,000 சதுரஅடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்கா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்! appeared first on Dinakaran.