கல்லூரி மாணவர்களுக்கான தமிழால் முடியும்! வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்


சென்னை: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் இன்று (30.07.2024) கல்லூரி மாணவர்களுக்கான தமிழால் முடியும்! வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சியை தொடங்கி வைத்தார்

இன்றைக்கு இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் அதுவும் குறிப்பாக நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இன்றைக்கு வாழ்க்கை வழிகாட்டி பயிற்சியாக தமிழால் முடியும் என்கின்ற தலைப்பில் துவங்கிக் கொண்டிருக்கின்ற இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்ற ஒரு சூழ்நிலை ஏற்படுத்தி தந்திருக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியையும், தொகுதி மக்களுக்கு நன்றியையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.

“மொழி என்பது ஒரு வைரம். பட்டை தீட்டத் தீட்ட அதனிடமிருந்து கோடிக்கணக்கான ஒளி மணிகள் வெளிப்படும்” என்று ஆங்கில அறிஞர் கூறியதை முத்தமிழறிஞர் கலைஞர் அய்யா அவர்கள் தான் பேசும்போது பட்டமளிப்பு விழாக்கள்தோறும் சொல்வது மாணவர்கள்தான் நம் நாட்டின் கண்மணிகள் என்பார்கள். அவர்களால் தான் நம்முடைய வருங்காலம் வைரம் போல் மின்னுகின்ற பொற்காலம் என்று குறிப்பிடுவதைப் போல நான் இங்கு பெருமிதமாக உங்களை மாணவ மணிகளே, வைர மணிகளே என்று அழைக்க விரும்புகிறேன்.

இனிதினும் இனிதான அமுதத்தேன் நம் தாய்மொழி தமிழ். அத்தமிழ் மொழியின் மேம்பட்ட வளர்ச்சிக்குப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

உலகத்தின் மூத்த மொழியாம் தமிழ்மொழியை உயர்த்திட பாடுபட்ட தமிழறிஞர்களுக்கு விருது வழங்குதல், தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்குதல், அயலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளைத் தோற்றுவித்தல், மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் திருக்குறள் முற்றோதல், தமிழ்க்கூடல், தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு, தீராக்காதல் திருக்குறள் திட்டம், தமிழ் பரப்புரைக் கழகத்தின் வாயிலாக அயல்நாடு மற்றும் வெளி மாநில தமிழர்களுக்குத் தமிழ்க் கற்பித்தல், எழுத்தாளர்களுக்குக் ‘கனவு இல்லம்’ வழங்குதல், வீடு வழங்கக்கூடிய திட்டம், உலகெங்கிலும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையில், ஜனவரி 12-ஆம் நாளை அயலகத் தமிழர் தின விழா கொண்டாடுகிற சூழ்நிலை, ஜூலை 18-ஆம் நாளினை பேரறிஞர் அண்ணா அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி “மெட்ராஸ் மாகாணம்” என்று இருந்ததை “தமிழ்நாடு” என்று பெயர் வைத்த நாளை இன்றைக்கு “தமிழ்நாடு நாள்” விழாவாக ஜுலை 18-ஆம் நாளை நாம் கொண்டாடுகிறோம்.

கடந்த வாரம் காஞ்சிபுரத்தில் இந்த நிகழ்ச்சி மூன்றாம் ஆண்டாக இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் இன்றைக்கு கொண்டாடப்பட்டு வருவதை இந்த நேரத்தில் பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மாநில அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு உரிய அங்கீகாரம் அளித்து, அரசாணை வெளியிட்டமை தொடங்கி, அண்மையில் தமிழ்நாடு வணிகர்கள் நல வாரிய கூட்டத்தில், “தமிழ்நாட்டின் வீதிகளில் தமிழைக் காணவில்லை என யாரும் சொல்லக் கூடாது என வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகை வைக்க முன்வர வேண்டும்” என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தியதை நீங்கள் பத்திரிகைகளில் கூட பார்த்திருப்பீர்கள். அதற்காக இந்த நேரத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தஞ்சைத் தரணியில் தமிழுக்கென தனிநிலையாக உருவாக்கப்பெற்ற தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கழக அரசின் பெருமுயற்சியால் ஓய்வுபெற்ற கல்வி நிலை மற்றும் அலுவல் நிலைப் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கென ரூபாய் 17 கோடியே 20 இலட்சத்து 28 ஆயிரம் வழங்கிட ஆணையிட்டார்கள் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பெற்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய ஆட்சிக்காலங்களில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கென்று பேராசிரியர் ஒருவரை இயக்குநராக நியமிக்கின்ற மரபு கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த காலத்தில் மாறிப்போன சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது கழக அரசால் மீண்டும் இயக்குநர் பதவிக்கு பேராசிரியர் நிலையில் நிரப்புவதென முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றார்கள்.

அதேபோல, முத்தமிழறிஞர் கலைஞர் அவகள் தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சராக முதன்முதலில் ஆட்சி பொறுப்பேற்றபோது தொடங்கப்பெற்ற தமிழ் வளர்ச்சித் துறையில் தற்போது முதுகலைத் தமிழ் இலக்கியம் படித்த மாணவர்கள் பயன் பெறும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வழியாக நம்முடைய தமிழக அரசின் துணை இயக்குநர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் இன்றைக்கு 50 சதவீதம் தமிழ் படித்த மாணவர்களை நிரப்ப வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டிருக்கின்றார்கள். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அதேபோல, ஈராயிரம் ஆண்டுகளின் தொன்மையும் தொடர்ச்சியும் உடைய பேரினம் நம் தமிழினம். அத்தமிழினத்தின் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அவர் தமிழுக்கு அளித்த கொடைகள் பல. தனது மொழித்திறனால் எழுத்து, பேச்சு, பாடல் எனப் பல பரிமாணங்களில் தமிழ்மொழிக்கு வளம் சேர்த்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அமைதிப் பூங்கா, அய்யன் திருவள்ளுவர், சிங்காரச் சென்னை, மாற்றுத் திறனாளி, திருநங்கை, கைம்பெண், மென்பொருள் பூங்கா என நூற்றுக்கணக்கான தனித்துவச் சொற்களைத் தமிழுக்கு ஈந்த அறிஞர் பெருமகனார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆவார்.

தமிழ்த் திருநாட்டின் வருங்கால எழுத்தாளர்களாக, பேச்சாளர்களாக மிளிர இருக்கும் மாணவச் செல்வங்களே நீங்கள் தவறாமல், அரசியல் விருப்பு வெறுப்பின்றி முத்தமிழறிஞர் கலைஞரின் எழுத்துகளைப் படியுங்கள்… ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ எனப் பறைசாற்றிக் கொண்ட அந்த மாமனிதரின் எழுத்துகள் உங்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் என்பதற்கு நான் உறுதியளிக்க கடமைப்பட்டிருக்கின்றேன்.

உலக அரங்கில் தனிப்பெருமையுடன் தலைநிமிர்ந்து நிற்கும் தமிழினம், உலகத்திற்கே வழிகாட்டும் சமூக நீதியை, அறச் சிந்தனையை, விருந்தோம்பலை, வீரத்தின் மாண்பை, நட்பின் இலக்கணத்தை, வாழ்வின் நெறியினைத் தந்த பெருமைக்குரியது. அத்தகு தமிழினத்தின் பெயரையும் சேர்த்து, இத்திட்டத்தின் பெயரினை இனி வரும் காலங்களில், ‘தமிழால் முடியும்! தமிழரால் முடியும்!’ எனக் குறிப்பிடலாம் என்பதைப் பெருமிதத்தோடு இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அய்யன் வள்ளுவனின் வழியில் சமூகநீதியால் தலைநிமிர்ந்து நிற்கும் தமிழினத்தின் இளம் பிள்ளைகள் நீங்கள் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்தி ‘தமிழால் நாங்கள் உயர்ந்தோம்!’, ‘தமிழால் மட்டுமே உயர்ந்தோம்!’ என வாழ்ந்து காட்டுங்கள்! என வாழ்த்து கூறி வாய்ப்புக்கு நன்றி கூறி நிறைவு செய்கிறேன்.

The post கல்லூரி மாணவர்களுக்கான தமிழால் முடியும்! வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் appeared first on Dinakaran.

Related Stories: