பிறந்த நாள் என்பது ஆண்டுதோறும் வரும் இன்னொரு நாள்தான். ஆனால், அதை நம்
சுற்றமும் சூழலும் சேர்ந்து வாழ்வில் மறக்கமுடியாத சிறந்த நாளாக மாற்றுவதை நினைக்கையில் மகிழ்வாகவும் நெகிழ்வாகவும் இருக்கிறது. அதேநேரம் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டியதற்கான கால கடிகாரமாகவும் இந்த நாளை நான் பார்க்கிறேன். பிறந்த நாளில், முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துதான் முதல் வாழ்த்து. நேரில் சென்றதும், ‘இளைஞர் அணி மாநாடு குறித்து, நான் எழுதிய கடிதத்தைப் படித்தாயா?’ என்றபடி வாழ்த்தினார்.
1988ம் ஆண்டு சென்னையில் தேசிய முன்னணித் தொடக்க விழா பேரணியில், தன்னுடைய தலைமையில், திமுக இளைஞர் அணியினர் தேசிய கட்சித் தலைவர்கள் முன்னிலையில் அணிவகுத்து வந்ததை அந்தக் கடிதத்தில் நினைவுகூர்ந்துள்ள தலைவர், அதேபோன்ற ஒரு பிரம்மாண்ட கூட்டத்தைச் சேலத்தில் என் தலைமையில் 2வது மாநில மாநாட்டில் திரட்ட உள்ளதைக் குறிப்பிட்டு, ‘கடல் இல்லா சேலம்,கருப்புச் சிவப்புக் கடலினைக் காணட்டும்’ என்று அந்தக் கடிதத்தை முடித்திருந் தார்கள். அந்த வாழ்த்துகளுடன் நேரிலும் என்னை வாழ்த்தியது நிறைவாக இருந்தது. அதன் பின்னர் அண்ணா கலைஞர் இருவரும் துயில்கொள்ளும் மெரினா கடற்கரையில் அவர்களது நினைவிடத்தில் திமுகவின் மூத்த தலைவர்களுடன் சென்று மரியாதை செலுத்தினேன்.
அதன்பின்னர் கலைஞருடைய கோபாலபுரம், சி.ஐ.டி.காலனி இல்லங்ளுக்குச் சென்று பாட்டிகளிடமும், திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியிடமும் வாழ்த்து பெற்றேன். அதைத் தொடர்ந்து என் தொகுதியில் நான் கலந்துகொண்ட இரு நிகழ்ச்சிகள் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வாக, என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய நிகழ்ச்சிகளாக அமைந்தன.ஒன்று சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்கின் சிலைத் திறப்பு விழா. வி.பி.சிங் என் மனதுக்கு நெருக்கமான தலைவர்களில் ஒருவர். அவருடைய சிலை, அவருடைய நினைவு நாளில், என்னுடைய சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைத்து, என் தொகுதிக்கு மேலும் பெருமை சேர்த்துத் தந்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வி.பி.சிங்கின் சிலை, தமிழ்நாட்டில் அமைக்கப்படுவது ஏன்? என்று, ஒவ்வொரு இந்தியனும் தங்களுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டால், அவரின் சிலை ஒவ்வொரு மாநிலத்திலும் அல்லவா அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் எழும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசுப் பணிகளில் 27 சதவித இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பி.பி.மண்டல் தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரையைச் செயல்படுத்தி சமூக நீதியை நிலைநாட்டிய வி.பி.சிங்குக்கு கலைஞருடைய இடத்தில் இருந்து நம் முதல்வர் அந்தச் சிறப்பைச் சேர்த்துள்ளார். இந்தச் சிலை திறப்பு விழாவுக்கு வி.பி.சிங்கின் மனைவி உள்பட குடும்பத்தினரையும் உத்தரபிரதேசத்தில் இருந்து முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவையும்அழைத்திருந்தது மிகவும் பொருத்தமாக அமைந்திருந்தது.
அதைத்தொடர்ந்து திமுக நிர்வாகிகள் இளைஞர் அணி சகோதரர்களுடன் மதிய உணவு உண்டு மகிழ்ந்தேன். திமுகவினர் எனக்கு வழங்கிய ‘மதிய தயாரிப்பு’ பொருட்களை என் தொகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று வழங்கி மகிழ்ந்தேன். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி மக்கள், இளைஞர் அணியைச் சேர்ந்த சகோதரர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினருக்கு நன்றி.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா, அப்துல் சமது, திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், செல்வப்பெருந்தகை, துரை வைகோ, சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல், சத்யராஜ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர்கள் அருண்ராஜா காமராஜ், மாரிசெல்வராஜ், சிவகார்த்திகேயன், சந்தானம், சூரி மற்றும் கீர்த்தி சுரேஷ், முரளி ராமசாமி உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இப்படி நேரிலும் அலைபேசியிலும் வாழ்த்தியவர்கள், சமூக வலைத்தளங்களின் வாயிலாக வாழ்த்தியவர்கள் என அனைவருக்கும் என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பிறந்த நாள் வாழ்த்துகளை, நான் மென்மேலும் உற்சாகத்துடன் உழைப்பதற்கான எரிபொருளாகவே எடுத்துக்கொள்கிறேன். பாசிச சக்திகளை வீட்டுக்கு அனுப்ப, `இந்தியா கூட்டணி’யின் ஒற்றுமையை, சக்தியை உலகுக்குப் பறைசாற்றும் வகையில், மாநில உரிமை மீட்பு முழக்கத்துடன் சேலத்தில், வரும் டிசம்பர் 17ம் தேதி நாம் முன்னெடுக்கும் திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாட்டின் வெற்றிக்காக உழைக்க உறுதியேற்போம். வாழ்த்திய அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post திமுக இளைஞர் அணியின் மாநில மாநாட்டின் வெற்றிக்காக உழைக்க உறுதியேற்போம் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.