இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரருக்கு ரூ.750 ஆக இருந்த சம்பளம், தற்போது ரூ.2,984 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதையும், கோயில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொருளையும் வைத்து அவரால் எப்படி குடும்ப வாழ்க்கையை நடத்த முடியும்? கட்டிடக்கலை மற்றும் கலாச்சார மதிப்பை கொண்டிருப்பதால் கோயில்களை பாதுகாத்து பராமரிக்க வேண்டும். இதை கோயில் ஊழியர்களால் மட்டுமே செய்ய முடியும். குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் பணியாளர்கள் அனைவருக்கும் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து அறநிலையத்துறை செயலர் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘குறைந்தபட்ச கூலி சட்டம் என்பது கோயில்களுக்கு பொருந்தாது. ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு நிறுவனமாகத்தான் கருத முடியும். அந்தந்த கோயிலின் வருமானத்தை பொறுத்தே அங்குள்ளவர்களின் ஊதியம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
அனைத்து கோயில் பணியாளர்களுக்கும் ஒரே சம்பளம் வழங்க முடியாது. அந்தந்த கோயிலின் வருமானம் தான் சம்பளத்தை நிர்ணயிக்கிறது. கோயில்கள் வருமானத்தை பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளன. சில கோயில்களில் உள்ள நிதி சிக்கல்களை கருத்தில் கொண்டு கோயில் பணியாளர்கள் நலநிதியம் உருவாக்கப்பட்டு சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு ஏற்புடையது அல்ல என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார். இதையடுத்து தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.
The post குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் கோயில் ஊழியர்களுக்கு சம்பளம் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.